காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு; விஷம் குடித்து காதல் ஜோடி தற்கொலை
காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்டனர்.
யாதகிரி:
யாதகிரி மாவட்டம் சகாபுரா தாலுகா முடபூல கிராமத்தை சேர்ந்தவர் பீமாசங்கர் (வயது 20). அதே கிராமத்தில் வசித்து வந்தவர் சங்கீதா (17). இவர்கள் 2 பேரும் தனித்தனியாக கல்லூரிகளில் படித்து வந்தார்கள். பீமாசங்கர், சங்கீதா இடையே காதல் மலர்ந்தது. இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்தார்கள். இவர்களது காதல் விவகாரம் 2 பேரின் வீட்டுக்கும் தெரியவந்தது. காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், கிராம பஞ்சாயத்து அலுவலகம் பின்பாக வாயில் நுரை தள்ளியபடி பீமாசங்கர், சங்கீதா பிணமாக கிடந்தார்கள். தகவல் அறிந்ததும் பீமராயனகுடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி விசாரித்தனர். அப்போது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், பீமாசங்கரும், சங்கீதாவும் விஷம் குடித்து தற்கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து பீமராயனகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.