முதல்-மந்திரியாக தேர்வு எதிரொலி: சித்தராமையா வீட்டின் முன்பு ஆதரவாளர்கள் கொண்டாட்டம்


முதல்-மந்திரியாக தேர்வு எதிரொலி: சித்தராமையா வீட்டின் முன்பு ஆதரவாளர்கள் கொண்டாட்டம்
x
தினத்தந்தி 19 May 2023 12:15 AM IST (Updated: 19 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சித்தராமையா முதல்-மந்திரியாக தேர்வு செய்யப்பட்டதால் அவரது வீட்டின் முன்பு ஆதரவாளர்கள் கேக் வெட்டியும், பட்டாசு வெடித்தும், பாலாபிஷேகம் செய்தும் கொண்டாடினர்.

பெங்களூரு:

காங்கிரஸ் வெற்றி

கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்துள்ளது. காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தாலும் முதல்-மந்திரி பதவிக்கு சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இடையே கடும் போட்டி எழுந்தது. இருவரும் பிடிவாதமாக இருந்ததால் முதல்-மந்திரியை தேர்ந்தெடுக்க முடியாமல் காங்கிரஸ் மேலிடம் திணறியது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் கர்நாடக புதிய முதல்-மந்திரியாக சித்தராமையா தேர்ந்தெடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது. இதனால் சித்தராமையாவின் ஆதரவாளர்கள் கொண்டாடினர். மேலும் கன்டீரவா மைதானத்தில் ஏற்பாடுகளும் நடந்தது. ஆனால், முதல்-மந்திரி பதவி தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றும், வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் காங்கிரஸ் அறிவித்தது. இதனால் தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

சித்தராமையா தேர்வு

இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு வரை முதல்-மந்திரி தேர்வு குறித்து டெல்லியில் பேச்சுவார்த்தை நடந்ததாக தெரிகிறது. டி.கே.சிவக்குமாரை சமாதானப்படுத்தும் முயற்சி வெற்றி அடைந்து, சித்தராமையா முதல்-மந்திரியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். துணை முதல்-மந்திரி பதவி டி.கே.சிவக்குமாருக்கு வழங்கப்பட்டது. நீண்ட நாள் நீடித்து வந்த இழுபறி முடிவுக்கு வந்தது. நேற்று காலை காங்கிரஸ் கட்சி இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இந்த நிலையில் சித்தராமையா 2-வது முறையாக முதல்-மந்திரியாக தேர்ந்தெடுக்கப்பட்டதால் அவரது ஆதரவாளர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஆதரவாளர்கள் கொண்டாட்டம்

பெங்களூருவில் உள்ள சித்தராமையாவின் குமரகிருபா வீட்டின் முன்பும், மைசூரு மாவட்டம் சித்தராமயனகுந்தியில் உள்ள வீட்டின் முன்பும் ஏராளமான ஆதரவாளர்கள் குவிந்தனர். இதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. பெங்களூருவில் சித்தராமையாவின் வீட்டின் முன்பு ஆதரவாளர்கள் திருவிழா போல கொண்டாடினார்கள். அவரது பேனருக்கு இனிப்பு ஊட்டியும், பாலாபிஷேகம் செய்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும் பட்டாசு வெடித்தும், தேங்காய் உடைத்தும் ஆரவாரம் செய்தனர். சித்தராமையா வீட்டின் முன்பு 'சித்தராமையா 2.0' என்ற பெயர் எழுதி கேக் வெட்டியும் மகிழ்ந்தனர்.

இதேபோல், மைசூருவிலும் சித்தராமையாவின் ஆதரவாளர்கள் உற்சாகமாக கொண்டாடினார்கள். புதிய முதல்-மந்திரியாக தேர்ந்தெடுக்கப்பட்ட சித்தராமையா நாளை (சனிக்கிழமை) பதவி ஏற்பார் என தெரிகிறது.


Next Story