சுருக்குமடி வலை விவகாரத்தில் 53 மணி நேரம் வரை மீன்பிடிக்க அனுமதி கோரிய மீனவர்கள் சுப்ரீம் கோர்ட்டு நிராகரிப்பு


சுருக்குமடி வலை விவகாரத்தில் 53 மணி நேரம் வரை மீன்பிடிக்க அனுமதி கோரிய மீனவர்கள் சுப்ரீம் கோர்ட்டு நிராகரிப்பு
x

சுருக்குமடி வலை விவகாரத்தில் 53 மணி நேரம் வரை மீன்பிடிக்க அனுமதி வேண்டும் என்ற மீனவர்களின் கோரிக்கையை சுப்ரீம் கோர்ட்டு நிராகரித்துவிட்டது.

புதுடெல்லி,

சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்க கூடாது என்ற தமிழக அரசின் விதியைக்காட்டி, 12 கடல் மைலுக்கு அப்பாலும் மீன்பிடிக்கக் கூடாது என்ற கட்டுப்பாட்டுக்கு இடைக்கால தடை கோரிய மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஏ.எஸ்.போபண்ணா தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.

இந்த விவகாரத்தில் கடந்த ஜனவரி 24-ந் தேதி பிறப்பித்த உத்தரவில், சிறப்பு பொருளாதார மண்டலப் பகுதிக்குள் (12 முதல் 200 கடல் மைல்) சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடிக்க சில கட்டுப்பாடுகளுடன் இடைக்கால அனுமதி வழங்கப்படுகிறது. வாரத்தில் திங்கள், வியாழன் என இரு நாட்களுக்கு மட்டும் இந்த இடைக்கால அனுமதி பொருந்தும். மீன்வளத்துறையில் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட, ஜி.பி.எஸ். பொருத்தப்பட்ட படகுகளை மட்டுமே சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும். காலை 8 மணிக்கு புறப்பட்டு அதிகபட்சம் மாலை 6 மணிக்குள் இந்தப் படகுகள் கரை திரும்ப வேண்டும் என தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி 53 மணி நேரம் வரை மீன்பிடிக்க அனுமதி கோரிய மீனவர்களின் இடையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டு மீண்டும் விசாரித்தது.

மீனவ அமைப்புகளின் சார்பில் மூத்த வக்கீல் ஏ.சிராஜுதின், வக்கீல் ஜெயசுகின் ஆஜராகி, மத்திய அரசு சட்டத்திலும், மாநில சட்டத்தின்கீழும் மீன்பிடி படகுகள் எதுவும் பதிவு செய்யவில்லை என தமிழ்நாடு அரசே தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பிறப்பித்த உத்தரவில் மாற்றம் செய்ய வேண்டும். சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி 53 மணி நேரம் வரை மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும். ஐந்து டன் அளவுக்கு மட்டுமே மீன்பிடிக்கலாம் என்று நிபந்தனை விதிக்கலாம் என வாதிட்டனர்.

மீனவர்களின் கோரிக்கையை தற்போதைய நிலையில் ஏற்கமுடியாது என நிராகரித்த சுப்ரீம் கோர்ட்டு, மீன்பிடி படகுகள் பதிவு தொடர்பாக ஏற்கனவே பிறப்பித்த உத்தரவில் மாற்றம் செய்து மாநில அரசோ அல்லது மத்திய அரசு இயற்றிய சட்டத்தின்கீழ் பதிவு செய்திருந்தாலே போதும் தெளிவுபடுத்தியது.


Next Story