மனநலம் பாதித்த சிறுமி கடத்தி பலாத்காரம் செய்து, கொலை... மரண தண்டனையை உறுதி செய்த சுப்ரீம் கோர்ட்டு


மனநலம் பாதித்த சிறுமி கடத்தி பலாத்காரம் செய்து, கொலை... மரண தண்டனையை உறுதி செய்த சுப்ரீம் கோர்ட்டு
x
தினத்தந்தி 24 Jun 2022 9:54 AM GMT (Updated: 24 Jun 2022 10:02 AM GMT)

சுப்ரீம் கோர்ட்டு, உடல் மற்றும் மன நலம் பாதித்த சிறுமியை ஏமாற்றி, கடத்தி, பலாத்காரம் செய்து, கொடூர கொலை செய்த நபரின் மரண தண்டனையை உறுதி செய்துள்ளது.

புதுடெல்லி,

ராஜஸ்தான் ஐகோர்ட்டு மற்றும் கீழ் கோர்ட்டு உறுதி செய்த மரண தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு இன்று உறுதி செய்துள்ளது. இதன்படி, மனோஜ் பிரதாப் சிங் என்ற நபருக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்த மனோஜ் பிரதாப் சிங் என்பவர் கடந்த 2013ம் ஆண்டு வாக்கில், காய்கனி விற்கும் தம்பதியின் கண் முன்னே, அவர்களது உடல் மற்றும் மன நலம் பாதித்த ஏழரை வயது சிறுமியை சாக்லேட் தருகிறேன் என கூறி கடத்தி சென்றுள்ளார். பின்பு அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதன்பின்னர், அந்த சிறுமியின் தலையை அடித்து, உடைத்து கொடூர கொலை செய்துள்ளார்.

கடந்த 2013ம் ஆண்டு அக்டோபரில் போக்சோ நீதிமன்ற சிறப்பு நீதிபதி, வழக்கின் தன்மையை முன்னிட்டு மரண தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். இதன் மீது பிரதாப் சிங் செய்த மேல்முறையீட்டில், கீழ் கோர்ட்டின் தண்டனையை ராஜஸ்தான் ஐகோர்ட்டு கடந்த 2015ம் ஆண்டு உறுதி செய்தது. இதனை தொடர்ந்து வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது.

இதனை நீதிபதிகள் கன்வில்கர், தினேஷ் மகேஷ்வரி மற்றும் சி.டி. ரவிகுமார் அடங்கிய அமர்வு விசாரணை நடத்தியது. இதில், ராஜஸ்தான் ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து பிரதாப் சிங் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து, மரண தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டது.

இதுபற்றி நீதிபதிகள் கூறும்போது, குற்றத்தின் தன்மையை கவனத்தில் கொள்ளும்போது, மனசாட்சியை உலுக்கும் வகையில் கொடூரமுறையில் சிறுமி தலை நசுக்கி கொல்லப்பட்டு உள்ளார். சிறுமியின் முன்பக்க எலும்பில் உடைந்த மற்றும் காயங்கள் பலவும் உள்ளன.

இந்த வழக்கில், தண்டனையை குறைப்பதற்கு எந்த வகையிலும் காரணம் இல்லை. இதற்கு பதிலாக, ஆயுள் தண்டனை அளிப்பதற்கு ஏற்ப அந்த நபரின் குற்ற செயல் இல்லை. இதற்கு முன்பும், பொது சொத்துகளுக்கு ஊறு விளைவித்தல், மற்றொரு சிறை கைதியின் கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ளது போன்ற கடந்தகால வரலாறையும் பிரதாப் சிங் கொண்டுள்ளார்.

அவர் திருந்தி வருவதற்கோ, மறுவாழ்வு அடைவதற்கான எந்த சாத்தியமும் காணப்படவில்லை. திரும்பவும் இதேபோன்ற குற்றங்களை செய்வதற்கான சாத்தியம் உள்ளது. அவர் திருந்துவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டாலும், இதுபோன்ற மற்றொரு குற்ற சம்பவம் நடைபெறாது என்பதற்கான சாத்தியம் எதுவும் இல்லை. இதன் தொடர்ச்சியாக, மரண தண்டனை அளிப்பது தவிர வேறு எந்த வாய்ப்பும் இந்த வழக்கில் எங்கள் முன் இல்லை என்று கூறியுள்ளனர்.


Next Story