சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சொந்தமான இடங்கள் கணக்கெடுப்பு- அதிகாரிகள் நடவடிக்கை


சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சொந்தமான இடங்கள் கணக்கெடுப்பு- அதிகாரிகள் நடவடிக்கை
x

கோப்புப்படம் 

கோவில் நிலங்களை அளவீடு செய்யும் பணியில் வருவாய் மற்றும் வனத்துறையினருடன் இணைந்து தேவசம் போர்டு அதிகாரிகளும் ஈடுபட்டனர்.

திருவனந்தபுரம்,

கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோவில் நடை ஒவ்வொரு தமிழ் மாத முதல் தேதியன்று திறக்கப்படும். அதன்படி ஆவணி மாத பூஜைகளுக்காக கடந்த 16-ந் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது.

மறுநாள் அதிகாலை முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். நேற்று அதிகாலை 5 மணிக்கு நடை திறந்த பின்பு ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தினமும் இரவு 7 மணிக்கு படி பூஜையும் நடைபெறுகிறது. 21-ந் தேதி இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது.

இதற்கிடையே சபரிமலை கோவிலுக்கு சொந்தமான இடங்கள் மற்றும் நிலத்தை கண்டறிந்து கையகப்படுத்த தேவசம் போர்டு முயற்சி மேற்கொண்டது. இதற்கு வனத்துறை, வருவாய் துறையினர் முழுமையாக ஒத்துழைக்கவில்லை என புகார் எழுந்தது. இது தொடர்பாக கேரள ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த கோர்ட்டு, சபரிமலை கோவிலுக்கு சொந்தமான நிலத்தை கண்டறிந்து அளவீடு செய்து அவற்றை தேவசம் போர்டிடம் ஒப்படைக்க மாநில வனத்துறை, வருவாய் துறை மற்றும் தேவசம் போர்டுக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து சபரிமலையில் ஐயப்பன் கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் மற்றும் இடங்களை கண்டறியும் பணி நேற்று தொடங்கியது. கோவில் நிலங்களை அளவீடு செய்யும் பணியில் வருவாய் மற்றும் வனத்துறையினருடன் இணைந்து தேவசம் போர்டு அதிகாரிகளும் ஈடுபட்டனர்.


Next Story