உலகிலேயே உயரமான சிவன் சிலை: ராஜஸ்தானில் இன்று திறப்பு


உலகிலேயே உயரமான சிவன் சிலை இன்று ராஜஸ்தான் மாநிலத்தில் திறக்கப்படுகிறது.

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலம் ராஜ்சமந்த் மாவட்டத்தில் உள்ள நத்வாரா நகரில், 'விஸ்வஸ்ரூபம்' என்று அழைக்கப்படும் பிரமாண்ட சிவன் சிலை இன்று (சனிக்கிழமை) திறக்கப்படுகிறது.

369 அடி உயரமுள்ள இது, உலகிலேயே உயரமான சிவன் சிலையாக கருதப்படுகிறது.

தியான தோற்றத்தில்...

ராஜஸ்தானின் பிரபல சுற்றுலாத்தலமான உதயப்பூரில் இருந்து 45 கி.மீ. தொலைவில், ஒரு குன்றின் மீது இந்த சிலை அமைக்கப்பட்டிருக்கிறது. தத் பதம் சன்ஸ்தான் என்ற அமைப்பு இந்த சிலையை அமைத்திருக்கிறது.

தியானநிலை தோற்றத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த சிவன் சிலையை 20 கிலோமீட்டர் தொலைவில் இருந்துகூட பார்க்க முடியும் என்று கூறப்படுகிறது. இரவிலும் இந்தச் சிலையை காணக்கூடிய வகையில் ஒளி வெள்ள விளக்குகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

4 லிப்டுகள், 3 வரிசை படிக்கட்டுகள்

சிலைக்குள் அமைக்கப்பட்டுள்ள 4 லிப்டுகள், 3 வரிசை படிக்கட்டுகள் மூலம் பக்தர்கள் உள்ளே சென்று பார்க்கலாம். இங்கு ஒரு அரங்கும் அமைக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 3 ஆயிரம் டன் உருக்கு மற்றும் இரும்பு, கான்கிரீட் மற்றும் மணல் ஆகியவற்றை பயன்படுத்தி, 10 ஆண்டுகளில் இந்த சிலை கட்டப்பட்டிருக்கிறது. சுமார் 250 ஆண்டுகள் நீடிக்கும் வகையிலும், 250 கி.மீ. வேகத்தில் வீசும் காற்றை தாங்கும் வகையிலும் இந்த சிவன் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

முதல்-மந்திரி முன்னிலையில்...

கடந்த 2012-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் இந்த சிலை அமைப்பு பணியை ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட் தொடங்கிவைத்தார். இன்று அவரது முன்னிலையில், சிவன் சிலை திறந்துவைக்கப்படுகிறது. சட்டசபை சபாநாயகர் சி.பி.ஜோஷி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

இந்த சிலை அமைந்துள்ள பகுதியைச் சுற்றிலும், சுற்றுலா பயணிகள் உற்சாகமாக பொழுதை கழிக்கும் வகையில் சாகச சுற்றுலா வசதிகள் போன்றவையும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.


Next Story