தமிழகத்தின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி
வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி நீர் திறக்கும்படி காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவிட்டுள்ள நிலையில் தமிழகத்தின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது கர்நாடக போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றி என்று துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.
பெங்களூரு:-
கர்நாடகத்திற்கு துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
பொய் சொல்ல முடியாது
காவிரி அணைகளுக்கு எவ்வளவு நீர் வருகிறது, வெளியேற்றப்படும் நீரின் அளவு எவ்வளவு என்பதை மூடிமறைக்க முடியாது. ஒகேனக்கல் பிலிகுண்டுலு அளவீட்டு மையத்தில் நீர் வரத்து குறித்த விவரங்கள் பதிவாகிறது. இதை 2 மாநில அதிகாரிகளும் கவனித்து கொண்டு இருக்கிறார்கள். தமிழகம் வினாடிக்கு 12 ஆயிரத்து 500 கனஅடி நீர் திறக்க வேண்டும் என்று கேட்கிறது. நம்மால் வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீர் கூட வழங்க முடியாத நிலையில் உள்ளோம்.
அதனால் நீர்வரத்து, நீர்வெளியேற்றம் குறித்த விஷயத்தில் பொய் சொல்ல முடியாது. நாம் பொய் சொன்னால் உண்மை தகவல்களை அதிகாரிகள் கூறுவார்கள். நாம் என்ன சொன்னாலும் நம்ப மாட்டார்கள். பெங்களூருவை சுற்றியுள்ள பகுதிகளில் சிறிது மழை பெய்துள்ளதால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது குமாரசாமியின் தந்தை தேவேகவுடா என்ன சொன்னார்?.
போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி
பிரதமருக்கு தேவேகவுடா கடிதம் எழுதியுள்ளார். இது குமாரசாமிக்கு தெரியுமா?. நீர் விஷயத்தில் குமாரசாமி அரசியல் செய்வதை விட்டுவிட்டு மாநிலத்தின் நலன் காக்க முயற்சி செய்யட்டும். காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் நமது அதிகாரிகள் உண்மை தகவல்களை எடுத்து வைத்துள்ளனர். தமிழக அரசு வினாடிக்கு 12 ஆயிரத்து 500 கனஅடி நீர் கேட்டுள்ளது. அதை ஒழுங்காற்று குழு நிராகரித்துள்ளது. இது கர்நாடக மக்கள் நடத்தும் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி.
காவிரி ஒழுங்காற்று குழு தமிழகத்திற்கு வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி நீர் திறக்கும்படி உத்தரவிட்டுள்ளது. வழக்கமாக எப்போதும் வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி நீர் காவிரியில் சென்று கொண்டிருக்கும். நாம் அணையில் இருந்து கூடுதலாக வினாடிக்கு 1,000 கனஅடி நீர் திறந்தால் போதும். காவிரி விவகாரத்தில் ஒத்துழைப்பு வழங்கிய மக்கள், அமைதியாக முழு அடைப்பு நடத்தியவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.