59 ஆயிரம் பேர் கலந்து கொண்ட மும்பை மாரத்தான் ஓட்டம்


59 ஆயிரம் பேர் கலந்து கொண்ட மும்பை மாரத்தான் ஓட்டம்
x

எத்தியோப்பியாவை சேர்ந்த ஹயேலி லெமி பெர்கானு தொடர்ந்து 2-வது முறையாக மும்பை மாரத்தான் போட்டியில் முதல் இடம் பிடித்து சாதனை படைத்தார்.

மும்பை,

மும்பையில் ஆண்டு தோறும் ஜனவரி மாதம் 'மும்பை மாரத்தான்' ஓட்டம் மிகவும் பிரமாண்டமான முறையில் நடத்தப்படுகிறது. நாட்டிலேயே அதிகம் பேர் பங்கேற்கும் மாரத்தான் போட்டிகளில் இதுவும் ஒன்றாகும். இந்த ஆண்டு மும்பை மாரத்தான் ஓட்டம் இன்று நடந்தது. முழு மாரத்தான், அரை மாரத்தான், 6 கி.மீ. ஓட்டம் என பல பிரிவுகளாக போட்டி நடந்தது. இதில் வெளிநாட்டு வீரர்கள், நாடு முழுவதும் இருந்து வந்தவர்கள், பொதுமக்கள், நடிகர், நடிகைகள் என 50 ஆயிரத்துக்கு அதிகமானவர்கள் கலந்து கொண்டனர்.

சி.எஸ்.எம்.டி. பகுதியில் இருந்து போட்டியை கவர்னர் ரமேஷ் பயஸ், முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர். இந்த ஓட்டம் ஒர்லி கடல் வழி பாலம் வழியாக சென்று மீண்டும் சி.எஸ்.எம்.டி.யை வந்தடைந்தது.

போட்டி தொடங்கியவுடன் ஆயிரக்கணக்கானவர்கள் இலக்கை நோக்கி ஓடினர். முதல் இடத்தை பிடிப்பதை விட இலக்கை முடிக்க வேண்டும் என்பதில் பலர் கவனமாக இருந்தனர். சர்வதேச, தேசிய அளவிலான மாரத்தான் போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்கள் மட்டும் இலக்கை நோக்கி வேகமாக ஓடினர். பெண்கள் சேலை அணிந்தும், சமூக பிரச்சினைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிலர் வித்தியாசமான வேடமணிந்தும் ஓடினர். மாற்றுத்திறனாளிகளும், வயதானவர்களும் மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டு ஓடியது மற்றவர்களுக்கு உத்வேகத்தை அளிக்கும் வகையில் அமைந்தது.

விறுவிறுப்பாக நடந்த மாரத்தான் போட்டியில் சர்வதேச அளவிலான போட்டியில் பங்கேற்ற எத்தியோப்பியாவை சேர்ந்த ஹயேலி லெமி பெர்கானு தொடர்ந்து 2-வது முறையாக மும்பை மாரத்தான் போட்டியில் முதல் இடம் பிடித்து சாதனை படைத்தார். அவர் மொத்த தூரமான 42.195 கி.மீ. தூரத்தை 2 மணி நேரம் 7 நிமிடம் 50 வினாடிகளில் கடந்து சாதனை படைத்தார். 2-வது, 3-வது இடத்தை எத்தியோப்பியாவை சேர்ந்த ஹேமனோட் அலிவ், மிட்கு டபா ஆகியோர் பிடித்தனர்.

பெண்கள் பிரிவிலும் எத்தியோப்பியா நாட்டு வீராங்கனைகளே ஆதிக்கம் செலுத்தினர். அந்த நாட்டை சேர்ந்தவர்கள் முதல் 8 இடங்களை பிடித்தனர். இதில் அபரேஷ் மின்சேவா, முலுகப்ட் டிசேகா, மெதின் பெஜனே முதல் 3 இடங்களை பிடித்தனர்.

இந்தியர்களுக்கான முழு மாரத்தான் போட்டியில் ஆந்திராவை சேர்ந்த புகாதா ஸ்ரீனு முதல் இடம் பிடித்தார். அவர் 2 மணி நேரம் 17 நிமிடம் 29 வினாடிகளில் இலக்கை அடைந்தார். கோபி தொனக்கல் 2-வது இடத்தையும், செர் சிங் தன்வர் 3-வது இடத்தையும் பிடித்தனர். பெண்களுக்கான போட்டியில் நிர்மாபென் பாட்டர்ஜி, ரேஷ்மா கேவ்தே, ஷியாமலி சிங் முறையே முதல் 3 இடங்களை பிடித்தனர்.


Next Story