3 தேர்தல் சின்னங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்தது ஷிண்டே அணி
உதயசூரியன், கேடயம் மற்றும் வாள், அரசமரம் ஆகிய 3 தேர்தல் சின்னங்களை ஏக்நாத் ஷிண்டே தரப்பு தேர்தல் ஆணையத்திடம் இன்று சமர்ப்பித்து உள்ளது.
புனே,
மராட்டியத்தில் சிவசேனா கட்சி உத்தவ் தாக்கரே, ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 2 பிரிவாக செயல்பட்டு வருகிறது. ஏக்நாத் ஷிண்டே வசம் பெரும்பாலான எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். உத்தவ் தாக்கரேவிடம் கட்சி நிர்வாகிகள் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் அடுத்த மாதம் 3-ந்தேதி அந்தேரி கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த தேர்தலில் உத்தவ் தாக்கரே அணி சார்பில் மறைந்த எம்.எல்.ஏ. ரமேஷ் லட்கேவின் மனைவி போட்டியிடுகிறார்.
இதற்கிடையே இடைத்தேர்தலில் உத்தவ் தாக்கரே அணிக்கு வில், அம்பு சின்னம் ஒதுக்கக்கூடாது என ஷிண்டே தரப்பு தேர்தல் ஆணையத்தில் முறையிட்டது.
இதனையடுத்து சிவசேனாவின் பெயர், வில், அம்பு சின்னம் முடக்கப்பட்டதுடன், இரு தரப்பினரும் தங்கள் அணிக்கான 3 புதிய பெயர்களை தேர்வு செய்து அனுப்புமாறு கேட்டுக்கொண்டது.
தொடர்ந்து, உத்தவ் தாக்கரே அணியினர் தீப்பந்தம், திரிசூலம், உதயசூரியன் ஆகிய 3-ல் ஒன்றை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் கேட்டு இருந்தனர். இதேபோல சிவசேனா பாலாசாகேப் பிரபோந்த்கர் தாக்கரே, சிவசேனா பாலாசாகேப் தாக்கரே, சிவசேனா-உத்தவ் பாலாசாகேப் தாக்கரே ஆகிய பெயர்களில் ஒன்றை தங்கள் அணிக்கு ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து இருந்தனர்.
இந்தநிலையில் நேற்று இரவு தேர்தல் ஆணையம் உத்தவ் தாக்கரே அணிக்கு 'தீப்பந்தம்' சின்னம் ஒதுக்கியது. மேலும் அவர்களின் அணிக்கு 'சிவசேனா- உத்தவ் பாலாசாகேப் தாக்கரே' பெயர் வழங்கப்பட்டது.
இதேபோன்று, ஷிண்டே தரப்பினரும் 3 சின்னம், பெயர்களை தேர்வு செய்து, அதில் ஒன்றை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்தனர். இதில் அவர்களும் திரிசூலம், உதயசூரியன், கதாயுதம் ஆகிய 3-ல் ஒரு சின்னம், பால்தாக்கரே பெயருடன் சேர்ந்து சிவசேனா வருமாறு 3 பெயர்களையும் சமர்ப்பித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
ஆனால், திரிசூலம், உதயசூரியன், கதாயுதம் ஆகிய சின்னங்கள் ஒதுக்க கூடிய பட்டியலில் இல்லை என கூறி அவற்றை ஒதுக்க முடியாது என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
அதனால், புதிதாக 3 தேர்தல் சின்னங்களை இன்று சமர்ப்பிக்கும்படி ஷிண்டே தரப்புக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது. ஷிண்டே அணிக்கு பாலா சாகேப் சிவசேனா என்ற பெயர் வழங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, ஏக்நாத் ஷிண்டே தரப்பு, உதயசூரியன், கேடயம் மற்றும் வாள், அரசமரம் ஆகிய 3 தேர்தல் சின்னங்களை தேர்தல் ஆணையத்திடம் இன்று சமர்ப்பித்து உள்ளது.