தலைமை செயலாளரின் உதவியாளர் என கூறி கர்நாடக முதல்-மந்திரி வீட்டிற்குள் நுழைய முயன்ற வாலிபர் கைது
தலைமை செயலாளரின் உதவியாளர் என்று கூறி கர்நாடக முதல்-மந்திரியின் வீட்டிற்குள் நுழைய முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
பெங்களூரு:
தலைமை செயலாளரின் உதவியாளர்...
பெங்களூரு குமரகிருபா சாலையில் கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையின் கிருஷ்ணா இல்லம் அமைந்து உள்ளது. இந்த இல்லத்தில் போலீசார் வழக்கம்போல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த ஒருவர் தன்னை பெங்களூரு மாநகராட்சியின் உதவி என்ஜினீயர் என்றும், கர்நாடக தலைமை செயலாளரின் உதவியாளர் என்றும் கூறினார்.
மேலும் முதல்-மந்திரி இல்லத்தில் நடக்கும் கூட்டத்தில் கலந்துகொள்ள வந்திருப்பதாகவும் கூறினார். ஆனால் அந்த நபர் மீது போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது. இதனால் அவரிடம் இருந்த மாநகராட்சி அடையாள அட்டை, வாக்காளர் அட்டையை வாங்கி போலீசார் பார்த்தனர். ஆனால் அந்த 2 அட்டைகளும் வெவ்வேறாக இருந்தன.
முதல்-மந்திரி இல்லத்திற்குள்...
இதனால் அந்த நபரை பிடித்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவரது பெயர் பரமேஸ்வர் (வயது 30) என்பதும், மாநகராட்சி உதவி என்ஜினீயர் என்றும், கர்நாடக தலைமை செயலாளரின் உதவியாளர் என்று பொய் கூறியும் முதல்-மந்திரி இல்லத்திற்குள் நுழைய முயன்றதும் தெரியவந்தது.
இதனால் பரமேஸ்வரை ஐகிரவுண்ட் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் ஒப்படைத்தனர். அவரை கைது செய்த ஐகிரவுண்ட் போலீசார் முதல்-மந்திரி வீட்டுக்குள் அத்துமீறி நுழைய முயன்றதாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் அவர் முதல்-மந்திரி வீட்டிற்குள் நுழைய முயன்றதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.