தொழில்அதிபர் கொலையில் வாலிபர் கைது


தொழில்அதிபர் கொலையில் வாலிபர் கைது
x

பெங்களூருவில் ஓரினச்சேர்க்கை விவகாரத்தில் நடந்த தொழில்அதிபர் கொலையில் வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

பெங்களூரு:-

தொழில்அதிபர் கொலை

பெங்களூரு சந்திரா லே-அவுட் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வந்தவர் லியாகத் அலிகான் (வயது 43). இவர், தொழில்அதிபர் ஆவார். இவருக்கும் முஸ்கான் என்ற பெண்ணுக்கும் கடந்த மாதம் (பிப்ரவரி) 26-ந் தேதி தான் திருமணம் நடந்திருந்தது. அதாவது முஸ்கானை, லியாகத் அலிகான் 2-வது திருமணம் செய்திருந்தார். இந்த நிலையில், கடந்த மாதம் 28-ந் தேதி தன்னுடைய வீட்டில் தலையில் பலத்த காயங்களுடனும், கத்திக்குத்து காயங்களுடனும் லியாகத் அலிகான் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இதுகுறித்து சந்திரா லே-அவுட் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடிவந்தனர். இதற்கிடையில், போலீஸ் விசாரணையில், லியாகத் அலிகானும், இலியாஸ் (26) என்பவரும் நெருங்கி பழகி வந்தது தெரியவந்தது. ஆனால் லியாகத் அலிகான் கொலை செய்யப்பட்ட மறுநாளே (கடந்த 1-ந் தேதி) தனியார் ஆஸ்பத்திரியில் இலியாஸ் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவர் மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயன்றது பற்றிய தகவலும் போலீசாருக்கு கிடைத்தது.

வாலிபர் கைது

இதையடுத்து, லியாகத் அலிகான் கொலைக்கும், இலியாசுக்கும் தொடர்பு இருப்பதை போலீசார் உறுதி செய்தார்கள். இந்த நிலையில், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த இலியாசிடம் போலீசார் விசாரித்த போது லியாகத் அலிகானை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். இதையடுத்து, நேற்று காலையில் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனதும் இலியாசை சந்திரா லே-அவுட் போலீசார் கைது செய்தார்கள்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஓரினச்சேர்க்கை

அதாவது லியாகத் அலிகானும், இலியாசும் ஓரினச்சேர்க்கையாளர்கள் ஆவார்கள். கடந்த 2 ஆண்டுகளாக அவர்கள் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு வந்துள்ளனர். அதே நேரத்தில் லியாகத் அலிகான் 2-வது திருமணம் செய்திருக்கிறார். இலியாசுக்கு திருமணம் செய்து வைக்க, அவரது பெற்றோர் பெண் தேடிவந்துள்ளனர். லியாகத் அலிகானுடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு வரும் விவகாரம் வெளியே தெரிந்தால், தனக்கு திருமணமாகாது, எதிர்காலம் பாதிக்கப்படும் என்று இலியாஸ் நினைத்துள்ளார்.

கடந்த மாதம் 28-ந் தேதி சந்திரா லே-அவுட்டில் உள்ள வீட்டில் வைத்து 2 பேரும் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதாக தெரிகிறது. அப்போது தன்னுடைய திருமணம், எதிர்காலம் பற்றி லியாகத் அலிகானுடன் இலியாஸ் பேசி இருக்கிறார். அந்த சந்தர்ப்பத்தில் 2 பேருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

சுத்தியால் தாக்கி கொலை

இதனால் ஆத்திரமடைந்த இலியாஸ் வீட்டில் கிடந்த சுத்தியலை எடுத்து லியாகத் அலிகானின் தலையில் பலமாக தாக்கி இருக்கிறார். அத்துடன கத்திரிகோலை எடுத்தும் அவரை சரமாரியாக குத்தியதாக தெரிகிறது. இதில், பலத்தகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். பின்னர் வீட்டுக்கு வந்த இலியாஸ் பல்வேறு மாத்திரைகளை எடுத்து சாப்பிட்டு விட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை குடும்பத்தினர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர் என்று விசாரணையில் தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து இலியாஸ் மீது சந்திரா லே-அவுட் போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story