சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கணவன் - வீடியோ எடுத்து சமூகவலைதளத்தில் பதிவிட்ட மனைவி
சிறுமியை தனது கணவன் பாலியல் வன்கொடுமை செய்வதை வீடியோ எடுத்த மனைவி அதை சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
லக்னோ,
சிறுமியை தனது கணவன் பாலியல் வன்கொடுமை செய்வதை வீடியோ எடுத்த மனைவி அதை சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த புகார் தொடர்பாக போலீசார் தரப்பில் கூறியதாவது, உத்தரபிரதேச மாநிலம் பாடன் மாவட்டம் பைசல்கஞ்ச் பெக்டா பகுதியில் உள்ள கிராமத்தை சேர்ந்த சிறுமி அதே பகுதியை சேர்ந்த ஒரு நபரின் வீட்டிற்கு கடந்த 12-ம் தேதி சென்றுள்ளார். அந்த வீட்டில் அந்த நபரும், அவரது மனைவியும் இருந்துள்ளனர்.
அந்த வீட்டிற்கு சென்ற சிறுமியை அந்த நபர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். தனது கணவன் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்வதை அந்த நபரின் மனைவி வீடியோ எடுத்துள்ளார்.
பின்னர் இதுபற்றி யாரிடமாவது கூறினால் வீடியோவை சமூகவலைதளத்தில் பதிவிட்டுவிடுவோம் என மிரட்டியுள்ளனர். இந்த மிரட்டலுக்கு அஞ்சி தனக்கு நடந்த கொடூரம் குறித்து அந்த சிறுமி யாரிடமும் கூறவில்லை.
இதனிடையே, அந்த வீடியோவை அந்த பெண் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இது சமூகவலைதளத்தில் வேகமாக பரவிய நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவரது பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபரையும், அதை வீடியோ எடுத்து சமூகவலைதளத்தில் பதிவிட்ட அந்த நபரின் மனைவியையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட நபர், அவரது மனைவியின் பெயர் உள்ளிட்ட விவரங்களை போலீசார் வெளியிடவில்லை.