டெல்லி மதுபானக்கொள்கை வழக்கு: தெலுங்கானா முதல்-மந்திரி மகளுக்கு 'சம்மன்' - அமலாக்கத்துறை முன் இன்று ஆஜர் ஆவாரா?
தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவின் மகள் கவிதாவுக்கு ‘சம்மன்' அனுப்பப்பட்டுள்ளது. அவர் அமலாக்கத்துறை முன் இன்று ஆஜர் ஆவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
புதுடெல்லி,
டெல்லியில் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு மதுபானக்கொள்கையை தளர்த்தி வெளியிட்டதில் பெரும் ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக, தனியார் துறையினருக்கு உரிமங்கள் உள்ளிட்ட சலுகைகளை வாரி வழங்கி, அதற்கு கைமாறாக சவுத் குரூப் என்ற நிறுவனத்தைச் சேர்ந்த விஜய் நாயர் என்பவர் மூலமாக ஆம் ஆத்மி கட்சி தலைவர்களுக்கு ரூ.100 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.
இந்த சவுத் குரூப்பில் தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவின் மகளும், எல்.எல்.சி.யுமான கவிதா, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் எம்.பி. மகுண்டா சீனிவாசுலு ரெட்டி உள்பட பல்வேறு பிரமுகர்கள் அங்கம் வகிப்பது அம்பலத்துக்கு வந்துள்ளது.
சி.பி.ஐ. விசாரணை
இந்த ஊழலில் சி.பி.ஐ. விசாரணைக்கு டெல்லி கவர்னர் உத்தரவிட்டதுடன், மதுபானக் கொள்கையையும் ரத்து செய்தார்.
அதைத் தொடர்ந்து இந்த ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் டெல்லி துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியா உள்ளிட்ட பிரபலங்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் கவிதாவிடம் சி.பி.ஐ. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தியது. அவரது முன்னாள் ஆடிட்டரையும் கைது செய்துள்ளது.
அமலாக்கத்துறை 'சம்மன்'
இதற்கிடையே இந்த ஊழலில் நடந்துள்ளதாக கூறப்படுகிற சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை தனியாக ஒரு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்த வழக்கில் கவிதாவிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது. இதற்காக அவர் 9-ந் தேதி (இன்று) டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை இயக்குனரகம் முன்பாக நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள சவுத் குரூப்பைச் சேர்ந்த தொழில் அதிபர் அருண் ராமச்சந்திரன் பிள்ளையின் வாக்குமூலத்தின் அடிப்படையில் கவிதாவிடம் விசாரணை நடத்தி அவரது வாக்குமூலத்தை அமலாக்கத்துறை இயக்குனரக அதிகாரிகள் பதிவு செய்வார்கள்.
அருண் ராமச்சந்திரன் பிள்ளை தற்போது அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்கப்படுகிறார்.
ஆஜர் ஆவாரா?
அமலாக்கத்துறை அனுப்பியுள்ள 'சம்மன்' குறித்து கவிதா கூறியதாவது:-
அமலாக்கத்துறை விசாரணைக்கு முழுமையான ஒத்துழைப்பு அளிப்பேன். ஆனால் நாடாளுமன்ற, சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கக்கோரி 10-ந் தேதி டெல்லியில் தர்ணாவில் ஈடுபட உள்ளேன். எனவே 9-ந் தேதி அமலாக்கத்துறை விசாரணைக்கு அழைத்திருப்பது பற்றி சட்ட ஆலோசனை பெறுவேன்.
எனது தந்தை சந்திரசேகரராவ் மற்றும் பாரத ராஷ்டிர சமிதி கட்சியின் போராட்டங்களை இந்த மிரட்டல் தந்திரங்கள் தடுத்து விட முடியாது. நாட்டின் ஒளிமயமான எதிர்காலத்துக்காக குரல் எழுப்புவதிலும், உங்கள் தோல்விகளை (மத்திய அரசின் தோல்விகளை) வெளிப்படுத்தவும் கட்சி தலைவர் தலைமையில் நாங்கள் தொடர்ந்து போராடுவோம்.
டெல்லியில் உள்ள அதிகார வெறியர்களுக்கு, மக்கள் விரோத ஆட்சிக்கு தெலுங்கானா ஒருபோதும் அடி பணிந்து விடாது என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன்.
நாங்கள் மக்கள் உரிமைகளுக்காக பயமின்றி, தீவிரமாக போராடுவோம் என்று அவர் கூறினார்.
அருண் ராமச்சந்திரன் பிள்ளையின் அமலாக்கத்துறை காவல் 12-ந் தேதி முடிகிறது. அவர் 13-ந் தேதி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார்.
ஒரு வேளை 9-ந் தேதி விசாணைக்கு ஆஜராகாமல் கவிதா தவிர்த்தால், அருண் ராமச்சந்திரன் பிள்ளையின் அமலாக்கத்துறை காவல் முடிவதற்கு முன்பாக அவரிடம் விசாரணை நடத்த மற்றொரு சம்மன் வழங்கப்படலாம் என தகவல்கள் கூறுகின்றன.
இந்த அருண் ராமச்சந்திரன் பிள்ளையின் காவல் அறிக்கையில், அவர் கவிதாவின் பினாமி முதலீடுகளின பிரதிநிதியாக செயல்பட்டதாக அமலாக்கத்துறை குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.