800 ஆண்டுகள் பழமையான ராட்சத ஆலமரத்தை பாதுகாக்க ரூ.2 கோடி நிதி வழங்கிய தெலுங்கானா எம்.பி!


800 ஆண்டுகள் பழமையான ராட்சத ஆலமரத்தை பாதுகாக்க ரூ.2 கோடி நிதி வழங்கிய தெலுங்கானா எம்.பி!
x

தெலுங்கானா மாநிலம் மகபூப்நகர் மாவட்டத்தில் 800 ஆண்டுகள் பழமையான ராட்சத ஆலமரம் 'பிள்ளாலமரி' உள்ளது.

ஐதராபாத்,

தெலங்கானா மாநிலம் மகபூப்நகர் மாவட்டத்தில் 800 ஆண்டுகள் பழமையான ராட்சத ஆலமரம் 'பிள்ளாலமரி' உள்ளது.

இது 800 ஆண்டுகள் பழமையான ஆலமரம் மற்றும் அதன் கிளைகள் தூரத்துக்கு பெரும் பரப்பளவில் பரவியுள்ளன. தூரத்தில் இருந்து பார்த்தால், மரம் ஒரு சிறிய குன்றின் தோற்றத்தை அளிக்கிறது.அருகில் சென்றால், அது ஒரு பெரிய பச்சை குடை போல் தெரிகிறது, அதன் கீழ் குறைந்தது 1000 பேர் எளிதாக தங்கலாம்.

800 ஆண்டுகள் பழமையான இந்த ஆலமரத்தை பாதுகாக்க தெலுங்கானா ராஷ்திரிய சமிதி(டிஆர்எஸ்) கட்சியின் ராஜ்யசபா எம்.பி ஜோகினபள்ளி சந்தோஷ் குமார், தனது எம்.பி நிதியில் இருந்து ரூ.2 கோடி அறிவித்துள்ளார்.

இது குறித்து எம்.பி சந்தோஷ் குமார் கூறுகையில், அழியும் தருவாயில் இருந்த பிள்ளாலமரி மரம் தற்போது பசுமையாக செழித்து வளர்ந்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. வரலாற்றுச் சிறப்பு மிக்க மரத்தைப் பாதுகாப்பது மக்களின் பொறுப்பாகும் என்றார்.

பசுமை இந்தியா அறக்கட்டளை தலைவராக உள்ள எம்.பி சந்தோஷ் குமார், இந்த ராட்சத ஆலமரத்தை பாதுகாத்து வந்த மாவட்ட நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்தார். மேலும், தனது சொந்த குழந்தைகளைப் போல மரத்தை பாதுகாத்ததற்காக அம்மாநில சுற்றுலாத்துறை மந்திரி ஸ்ரீனிவாஸ் கவுடுக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார்.

இந்த வரலாற்று சிறப்புமிக்க மரத்தை பாதுகாக்க உப்பு சொட்டு மருந்து வழங்கப்பட்டு, மரத்தின் அனைத்து வேர்களும் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

தெலுங்கு மொழியில் பிள்ளாலு என்றால் குழந்தைகள், மரி என்றால் ஆலமரம் என்பது பொருள். மரத்தடியில் ஒரு முஸ்லீம் துறவியின் கல்லறை உள்ளது. ஒரு மினி உயிரியல் பூங்கா மற்றும் தொல்பொருள் அருங்காட்சியகம் அருகில் உள்ளது.


Next Story