ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தற்காலிக நிறுத்தம்
தீபாவளியையொட்டி ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு:
பெங்களூருவில் கடந்த ஆகஸ்டு மாதம் கெட்டி தீர்த்த கனமழையால் பெல்லந்தூர், மகாதேவபுரா, வெளிவட்ட சாலை ஆகிய பகுதிகளில் மழைநீர் தேங்கியது. குடியிருப்புகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் மக்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மழைநீர் தேங்கியதற்கு ராஜகால்வாய்கள் ஆக்கிரமிப்பு தான் காரணம் என மாநகராட்சி அதிகாரிகள் குற்றம்சாட்டினர். இதையடுத்து கோர்ட்டு உத்தரவின்பேரில் மாநகராட்சி அதிகாரிகள் ராஜகால்வாய் ஆக்கிரமிப்புகளை பொக்லைன் எந்திரங்கள் உதவியுடன் மீட்டு வருகின்றனர். இந்த நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், பெங்களூருவில் உள்ள ராஜகால்வாய்கள் ஆக்கிரமிப்பு பொக்லைன் எந்திரங்கள் உதவியுடன் அகற்றும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. வருவாய் துறை அதிகாரிகள் கொடுக்கும் தகவலின் அடிப்படையில் ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டு, அவை அகற்றப்பட்டு வருகிறது. தற்போது வருவாய் துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வு அறிக்கைகள் நிறைவடையவில்லை. இதனால் புதிய அறிக்கை வரும் வரை ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தீபாவளி பண்டிகை என்பதால், இந்த பணியை நிறுத்த மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.