குதிரேமுக்கா வனப்பகுதியில் பயங்கர காட்டுத்தீ
குதிரேமுக்கா வனப்பகுதியில் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இதனால் 10 ஏக்காில் மரம், செடி-கொடிகள் எரிந்து நாசமாகி உள்ளன.
சிக்கமகளூரு:-
காட்டுத்தீ
சிக்கமகளூரு மாவட்டம் கலசா தாலுகாவில் குதிரேமுக்கா வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இந்த வனப்பகுதியில் ஆலதங்கடி பகுதியில் தீப்பிடித்து எரிந்தது. இதுபற்றி அந்தப்பகுதியை சேர்ந்த மக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.
தீயணைப்பு வாகனம் செல்ல முடியாத நிலையில், வனத்துறையினர் சமூக ஆர்வலர்கள், தன்னார்வலர்களுடன் இணைந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனாலும் தீ கொழுந்துவிட்டு எரிந்ததால் அவர்களால் அணைக்க முடியவில்லை.
10 ஏக்கரில்...
அங்கு தீயை அணைக்கும் பணி இரவு, பகலாக நடந்து வருகிறது. நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. ஆனாலும் காட்டுத்தீ முற்றில் அணைக்கப்படவில்லை. அந்த தீயை அணைக்கும் முயற்சியில் வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இந்த பணியில் 50-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர்.
இந்த தீ விபத்தால் குதிரேமுகா வனப்பகுதியில் 10 ஏக்கரில் மரம், செடி-கொடிகள் எரிந்து நாசமானது. ஆனாலும் இந்த தீ விபத்தில் வனவிலங்குகள் ஏதேனும் சிக்கி உயிரிழந்ததா என்பதை வனத்துறையினர் தெரிவிக்கவில்லை. கடும் வெயில் நிலவுவதால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என வனத்துறையினர் சந்தேகிக்கிறார்கள்.
இந்நிலையில் சார்மாடி மலைப்பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பிடித்த தீ இன்னும் கட்டுக்குள் வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் தீயணைப்பு படையினர் தொடர்ந்து அந்த தீயை அணைக்கு முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.