சொத்து விவகாரம்: பெண்ணை கடத்தி, 2 நாட்களாக பாலியல் வன்கொடுமை, சித்ரவதை செய்த கும்பல்


சொத்து விவகாரம்:  பெண்ணை கடத்தி, 2 நாட்களாக பாலியல் வன்கொடுமை, சித்ரவதை செய்த கும்பல்
x
தினத்தந்தி 19 Oct 2022 3:18 PM IST (Updated: 19 Oct 2022 4:08 PM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் சொத்து விவகாரத்தில் 5 பேர் கொண்ட கும்பல் பெண்ணை கடத்தி, 2 நாட்களாக சித்ரவதை, பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சி தகவல் வெளிவந்து உள்ளது.



புதுடெல்லி,


டெல்லியில் காசியாபாத் நகரில் இருந்து டெல்லியை இணைக்கும் பகுதியில் ஆசிரம சாலையில் பெண் ஒருவர் மயங்கிய நிலையில் கிடக்கிறார் என போலீசாருக்கு தகவல் சென்றுள்ளது. இதனை தொடர்ந்து அந்த பெண்ணை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவரை பரிசோதனை செய்ய மருத்துவர்கள் மறுத்து உள்ளனர்.

இதனை தொடர்ந்து, குரு தேஜ் பகதூர் மருத்துவமனைக்கு காசியாபாத் நகர போலீசார் அவரை கொண்டு சென்றனர். அதன்பின்பு, பெண்ணிடம் இருந்து வாக்குமூலம் பெற்றனர்.

அதில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. அந்த பெண் காசியாபாத் நகரில் நடந்த பிறந்த நாள் கொண்டாட்ட நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு விட்டு கடந்த ஞாயிற்று கிழமை டெல்லிக்கு திரும்பியுள்ளார்.

அவரது சகோதரர் பேருந்து நிலையம் ஒன்றில் பெண்ணை இறக்கி விட்டுள்ளார். பேருந்துக்காக காத்திருந்தபோது, அவரை கார் ஒன்று நெருங்கி நின்றுள்ளது. உள்ளே இருந்த 5 பேர் பெண்ணை இழுத்து காருக்குள் தூக்கி போட்டு கொண்டு பறந்தனர்.

அதன்பின், அடையாளம் தெரியாத இடத்திற்கு கொண்டு சென்று, பெண்ணை 2 நாட்களாக பாலியல் வன்கொடுமை செய்தும், சித்ரவதை செய்தும் உள்ளனர். இதன்பின்னரே, நேற்று அந்த பெண் ஆசிரம சாலையில் மயங்கிய நிலையில் போலீசாரால் கண்டெடுக்கப்பட்டு உள்ளார். இதனை போலீசார் தெரிவித்து உள்ளனர்.

இந்த வழக்கில் காசியாபாத் நகர மூத்த காவல் கண்காணிப்பாளர் விரிவான அறிக்கை விவரங்களை அளிக்கும்படி டெல்லி மகளிர் ஆணையம் நோட்டீஸ் ஒன்றை அனுப்பி உள்ளது.

இந்த சம்பவம் பற்றி காசியாபாத் நகர காவல் கண்காணிப்பாளர் நிபுன் அகர்வால் கூறும்போது, சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகள் 5 பேரும் பெண்ணுக்கு நன்றாக தெரிந்தவர்கள். அவர்களில் ஒருவரான ஷாருக்கான் என்பவர் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டு உள்ளார்.

பெண் மற்றும் குற்றவாளிகள் இடையே சொத்து விவகாரம் ஒன்று உள்ளது என்றும் அது கோர்ட்டு விசாரணையில் உள்ளது என்றும் கூறப்படுகிறது. நாங்கள் அனைத்து தேவையான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம் என அவர் இன்று கூறியுள்ளார்.


Next Story