டெல்லியில் பயங்கரம்: 60 முறை வாலிபரை குத்தி கொன்ற கும்பல்; 2 பேரை கொல்வோம் என சபதம்


டெல்லியில் பயங்கரம்:  60 முறை வாலிபரை குத்தி கொன்ற கும்பல்; 2 பேரை கொல்வோம் என சபதம்
x

டெல்லியில் செல்போனை திருடிய கும்பலுக்கு எதிராக சாட்சி கூறிய வாலிபரை 3 பேர் கொண்ட கும்பல் 60 முறை கத்தியால் குத்தி கொன்ற அதிர்ச்சி சம்பவம் நடந்து உள்ளது.

புதுடெல்லி,



டெல்லியின் வடகிழக்கே சுந்தர் நகரி பகுதியில் 3 பேர் கொண்ட கும்பல் ஒன்று வாலிபர் ஒருவரை நேற்று மாலை தொடர்ந்து முன்னும், பின்னும் 60 முறை கத்தியால் குத்தி கொன்ற அதிர்ச்சி சம்பவம் நடந்து உள்ளது.

ஓராண்டுக்கு முன் மணீஷ் என்ற வாலிபரிடம் இருந்து முஹ்சின் மற்றும் காசிம் என்ற 2 பேர் மொபைல் போனை பறித்து சென்றுள்ளனர். இந்த கொள்ளை சம்பவத்தின்போது, மணீஷின் கழுத்து மற்றும் வயிற்றில் கத்திக்குத்து விழுந்துள்ளது.

இதுபற்றி மணீஷ் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் குற்றவாளிகள் 2 பேரும் கைது செய்யப்பட்டனர். வழக்கை வாபஸ் பெற கோரி மணீஷ் மற்றும் அவரது குடும்பத்தினரை நேரில் வீட்டுக்கு சென்று காசிம் மற்றும் முஹ்சினின் நெருங்கிய கூட்டாளிகள் மிரட்டி வந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த 4 நாட்களுக்கு முன் செப்டம்பர் 28-ந்தேதி குற்றவாளிகளுக்கு எதிராக கோர்ட்டில் மணீஷ் சாட்சியம் கூறியுள்ளார். இதில் மிரட்டல் பற்றியும் விளக்கம் அளித்து உள்ளார்.

இதனால், அவர்கள் ஆத்திரமடைந்து உள்ளனர். மணீஷின் வீட்டுக்கு வெளியே பிலால், ஆலம் மற்றும் பைஜான் ஆகிய 3 பேர் கொண்ட கும்பல் பலர் முன்னிலையில் 60 முறை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர். பொதுமக்கள் முன்னிலையில் நடந்த இந்த பாதக செயலை சுற்றியிருந்தவர்கள் வேடிக்கை பார்த்தபடி இருந்தனர். யாரும் மணீஷை காப்பாற்ற முன்வரவில்லை.

இந்த சம்பவத்திற்கு பின்னர் குற்றவாளிகள், மணீஷை கொன்று விட்டோம். வந்து உடலை எடுத்து செல்லுங்கள். இன்னும் 2 பேரை கொல்வோம் என தெருவில் சத்தம் போட்டபடியே சென்றனர். இந்த கொடூர கொலை காட்சிகள் சி.சி.டி.வி. கேமிராவில் பதிவாகி இருந்தன.

அதில் குற்றவாளிகள், 60-க்கும் கூடுதலான முறை மணீஷை குத்தி கொன்றுள்ளனர். மணீஷ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது அவர் உயிரிழந்து விட்டார் என மருத்துவர்கள் கூறி விட்டனர்.

பா.ஜ.க. தலைவர் கபில் மிஷ்ரா வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், ஜிகாதிகள் மீண்டும் தலித் வாலிபரை கொலை செய்து விட்டனர் என தெரிவித்து உள்ளார்.

இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதி மக்கள் சாலைகளில் நீதி கேட்டு இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டனர். இரு வேறு சமூகத்தினர் இடையே நடந்த இந்த மோதலை தொடர்ந்து வன்முறை பரவி விடாமல் இருக்க அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். குற்றவாளிகள் 3 பேரும் போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளனர்.


Next Story