காஷ்மீர்: பள்ளிக்குள் புகுந்து ஆசிரியை சுட்டுக்கொலை - பயங்கரவாதிகள் அட்டூழியம்
காஷ்மீரில் பள்ளிக்குள் புகுந்த பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இந்து மதத்தை சேர்ந்த ஆசிரியை உயிரிழந்தார்.
ஸ்ரீநகர்,
ஜம்மு-காஷ்மீரில் சிறுபான்மையாக உள்ள இந்து, சீக்கியம் உள்ளிட்ட மதத்தினரை குறிவைத்து கடந்த சில நாட்களாக பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
இதற்கிடையில், ஜம்முவின் சம்பா மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜ்னி பாலா (வயது 36). இவர் காஷ்மீரின் குல்காம் மாவட்டம் கோபால்புரா பகுதியில் உள்ள அரசு பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர் இந்து மதத்தை (காஷ்மீரி பண்டிட்) சேர்ந்தவராவார்.
இந்நிலையில், ஆசிரியை ராஜ்னி இன்று காலை பள்ளிக்கூடத்தில் வழக்கமான பணிகளை செய்துகொண்டிருந்தார். அப்போது, பள்ளிக்கூடத்திற்குள் துப்பாக்கியுடன் நுழைந்த பயங்கரவாதிகள் ராஜ்னியை சரமாரியாக சுட்டுவிட்டு தப்பிச்சென்றனர்.
பயங்கரவாதிகள் சுட்டதில் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்து படுகாயமடைந்த ஆசிரியை ராஜ்னியை மீட்ட சக ஆசிரியர்கள் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மருத்துவமனையில் ராஜ்னியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தொடர்ந்து பள்ளிக்கூடம் அமைந்துள்ள பகுதியை சுற்றிவளைத்த பாதுகாப்பு படையினர் தப்பியோடிய பயங்கரவாதிகளை தேடி வருகின்றனர்.
காஷ்மீரில் இம்மாதத்தில் டாக்கெட்டட் கொலைகள் எனப்படும் இலக்கு கொலைகளில் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர். அதில், 3 பேர் பணியில் இல்லாத போலீசார், 4 பேர் பொதுமக்கள் ஆவர்.