துமகூரு உள்பட 3 மாவட்டங்களில் ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும்


துமகூரு உள்பட 3 மாவட்டங்களில் ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும்
x
தினத்தந்தி 29 Nov 2022 8:17 PM GMT (Updated: 29 Nov 2022 8:17 PM GMT)

கர்நாடகத்தில் துமகூரு உள்பட 3 மாவட்டங்களில் ஜவுளி பூங்கா அமைக்குமாறு மத்திய மந்திரி பியூஸ்கோயலை, முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தார்.

பெங்களூரு:-

ஜவுளி பூங்கா

முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நேற்று டெல்லி சென்றார். அங்கு கர்நாடகம்-மராட்டிய எல்லை பிரச்சினை தொடர்பான வழக்கில் ஆஜராகும் மூத்த வக்கீல் முகுல் ரோத்தகியை நேரில் சந்தித்து பேசினார். அதைத்தொடர்ந்து அவர் பல்வேறு துறைகளின் மத்திய மந்திரிகளை நேரில் சந்தித்து பேசினார். முதலில் மத்திய தொழில்துறை மந்திரி பியூஸ்கோயலை அவர் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, கர்நாடகத்தில் மித்ரா திட்டத்தின் கீழ் துமகூரு, கலபுரகி, விஜயாப்புரா ஆகிய 3 மாவட்டங்களில் சர்வதேச தரத்தில் ஜவுளி பூங்கா அமைக்குமாறு கோரிக்கை விடுத்தார்.

அதைத்தொடர்ந்து பசவராஜ் பொம்மை, கர்நாடகத்திற்கு வருகிற மார்ச் மாதத்திற்குள் 2 லட்சம் டன் அரிசி வழங்க வேண்டும் என்றும், அதில் உடனடியாக 50 ஆயிரம் டன் அரிசியை வழங்க வேண்டும் என்றும் மத்திய மந்திரி பியூஸ்கோயலிடம் கடிதம் கொடுத்தார். அந்த கடிதத்தை வாங்கிய அவர் பரிசீலிப்பதாக உறுதியளித்தார். அதைத்தொடர்ந்து ராணுவத்துறை மந்திரி ராஜ்நாத்சிங்கை பசவராஜ் பொம்மை நேரில் சந்தித்து பேசினார்.

கரடி சரணாலயம்

இந்த சந்திப்பின்போது, பெலகாவி மாவட்டம் துகமட்டி கிராமத்தில் ராணுவ வசம் உள்ள 732 ஏக்கர் நிலத்தை கர்நாடக அரசுக்கு ஒப்படைக்குமாறு கேட்டு கொண்டார். அந்த நிலம் ராணுவத்தின் வசம் இருப்பதால் அங்கு எந்த வளர்ச்சி பணிகளும் மேற்கொள்ள முடியவில்லை என்றும், அதனால் அந்த நிலத்தை கர்நாடகத்திற்கு வழங்க வேண்டும் என்றும் கூறினார். இதை பரிசீலிப்பதாக ராஜ்நாத்சிங் உறுதியளித்தார்.

அதைத்தொடர்ந்து மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல்துறை மந்திரி பூபேந்திர யாதவ்வை பசவராஜ் பொம்மை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது அவர், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள குடேகோட்டே கரடி சரணாலயம் மற்றும் பீமாகர் தேசிய வனப்பகுதியை சுற்றியுள்ள பகுதிகளை சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்குமாறு கேட்டு கடிதம் வழங்கினார்.

இந்த சந்திப்பின்போது, நீர்ப்பாசனத்துறை மந்திரி கோவிந்த் கார்ஜோள், முதல்-மந்திரியின் முதன்மை செயலாளர் மஞ்சுநாத் பிரசாத் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.


Next Story