சிவமொக்காவில், ஜவுளிகடை ஊழியர் கொலை வழக்கில் கைதான வாலிபருக்கு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு
சிவமொக்காவில், ஜவுளிகடை ஊழியர் கொலை வழக்கில் கைதான வாலிபருக்கு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் இந்த வழக்கின் விசாரணையை என்.ஐ.ஏ.வுக்கு மாற்ற கர்நாடக அரசு பரிசீலித்து வருகிறது. .
சிவமொக்கா: சிவமொக்காவில், ஜவுளிகடை ஊழியர் கொலை வழக்கில் கைதான வாலிபருக்கு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் இந்த வழக்கின் விசாரணையை என்.ஐ.ஏ.வுக்கு மாற்ற கர்நாடக அரசு பரிசீலித்து வருகிறது. .
வீரசாவர்க்கர் புகைப்படம்
சிவமொக்கா டவுன் அமிர் அகமது சர்க்கிள் பகுதியில் சுதந்திர தின பவளவிழாவை முன்னிட்டு கடந்த மாதம் (ஆகஸ்டு) 15-ந் தேதி வீரசாவர்க்கர் புகைப்படத்துடன் கூடிய பேனர் வைக்கப்பட்டு இருந்தது. இதற்கு மற்றொரு சமூகத்தை சேர்ந்த வாலிபர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், அவர்கள் வீரசாவர்க்கர் பேனரை அங்கிருந்து அகற்ற முயன்றனர். அப்போது இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது. இந்த நிலையில் அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அசம்பாவிதத்தை தடுக்க போலீசார் குவிக்கப்பட்டனர்.
இதற்கிடையே அன்றைய தினம் அந்த பகுதியில் ஜவுளிகடையில் இருந்த பிரேம் சிங் (வயது 20) என்பவரை மர்மநபர்கள் குத்தி கொலை செய்தனர். இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக சிவமொக்கா டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
4 பேர் கைது
இதையடுத்து வாலிபர் கொலையில் தொடர்புடையதாக நதீம், ரகுமான், அகமது, முகமது சபியுல்லா ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் கைது செய்யப்பட்டுள்ள சபியுல்லா என்பவருக்கு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
கொலை வழக்கில் கைதாகி உள்ள சபியுல்லா, வெளிநாடுகளை சேர்ந்த ஜெய்ஷி முகமது அமைப்புடன் பல நாட்களாக தொடர்பில் இருந்தது தெரியவந்தது. அவர் மீது ஏற்கனவே பல்வேறு சட்டவிரோத வழக்குகள் பதிவாகி இருந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டு உள்ளது.
என்.ஐ.ஏ.வுக்கு மாற்ற பரிசீலனை
இந்த விவகாரம் குறித்து போலீஸ் துறை மந்திரி அரக ஞானேந்திரா நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
ஜவுளிகடை ஊழியர் கொலையில் கைது செய்யப்பட்டுள்ள 4 பேரில் சபியுல்லா குறித்து பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அவருக்கு பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அதுதொடர்பான ஆதாரங்களை போலீசார் திரட்டி வருகின்றனர். அவர் மீது சிறப்பு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுபோன்ற பயங்கரவாதிகளுடன் தொடர்பில் உள்ளவர்கள் நாட்டின் அமைதிக்கு பாதிப்பு ஏற்படுத்துவார்கள். இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமைக்கு (என்.ஐ.ஏ.) மாற்றுவது குறித்து ஆலோசிக்கப்படுகிறது. விரைவில் இந்த வழக்கு என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.