மைசூரு தசரா விழாவில் பங்கேற்க கலைக்குழுவினர், விளையாட்டு வீரர்களை தேர்வு செய்ய வேண்டும்; மாவட்ட பஞ்சாயத்து முதன்மை செயல் அதிகாரி உத்தரவு
சிக்கமகளூருவில் இருந்து மைசூரு தசரா விழாவில் பங்கேற்க கலைக்குழுவினர், விளையாட்டு வீரர்களை தேர்வு செய்ய வேண்டும் என மாவட்ட பஞ்சாயத்து முதன்மை செயல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.
சிக்கமகளூரு;
சிக்கமகளூரு மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்தில் பஞ்சாயத்து முதன்மை செயல் அதிகாரி பிரபு தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் அவர், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு கூறியதாவது:-
மைசூரு தசரா விழா வருகிற செப்டம்பர் 26-ந் தேதி தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது. இந்த விழாவில் ஆண்டுதோறும் சிக்கமகளூருவை சேர்ந்த கலை குழுவினர் மற்றும் விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்வார்கள்.
இந்த ஆண்டு அதேபோல் வீரர்கள் மற்றும் கலைக்குழுவினரை அனுப்பி வைக்கப்படும். எனவே, விளையாட்டு வீரர்கள் மற்றும் கலைக்குழுவினரை தேர்வு செய்து உரிய பயிற்சி அளிக்கவேண்டும்.
மேலும் அவர்கள் மைசூரு சென்று வருவதற்கான போக்குவரத்து வசதிகள் மற்றும் அங்கு தங்குவதற்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்கவேண்டும். இதற்கான பொறுப்பு மாவட்ட பஞ்சாயத்து அதிகாரிகளுடையது.
இவ்வாறு அவர் கூறினார்.