சேவை குறைபாடு எதிரொலி: இளம்பெண்ணுக்கு, அழகு நிலையம் ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்
சேவை குறைபாடு எதிரொலியால் இளம்பெண்ணுக்கு, அழகு நிலையம் ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரு: பெங்களூரு நியூ திப்பசந்திராவில் 28 வயது இளம்பெண் வசித்து வருகிறார். கடந்த 2017-ம் ஆண்டு இந்திராநகரில் உள்ள அழகு நிலையத்தில் முகத்தை பொழிவாக ஆக்குவதற்காக அந்த இளம்பெண் சென்று இருந்தார். அப்போது இளம்பெண் முகத்தில் அழகு நிலைய ஊழியர்கள் சில பவுடர்களை தடவினர். இதனால் அந்த இளம்பெண்ணுக்கு முகத்தில் எரிச்சல் உண்டானது. இதுபற்றி இளம்பெண் கூறியும் அழகு நிலைய ஊழியர்கள் கண்டுகொள்ளவில்லை என்று தெரிகிறது.
இதையடுத்து அந்த இளம்பெண்ணுக்கு முகத்தில் எரிச்சல் அதிகமானது. அவர் ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சையும் பெற்றார். இந்த நிலையில் சாந்திநகரில் உள்ள நுகர்வோர் கோர்ட்டில் அழகு நிலையம் மீது சேவை குறைபாடு மனுவை இளம்பெண் தாக்கல் செய்தார். மேலும் தனக்கு அழகு நிலையம் ரூ.2 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் மனுவில் அந்த பெண் கூறி இருந்தார். அந்த மனு மீது விசாரணை நடத்திய நுகர்வோர் கோர்ட்டு முக அழகுக்காக இளம்பெண் செலவழித்த ரூ.30 ஆயிரம், வழக்கு செலவு ரூ.10 ஆயிரம், இதர செலவுகள் ரூ.10 ஆயிரம் என ரூ.50 ஆயிரத்தை 30 நாட்களுக்குள் இழப்பீடாக அந்த இளம்பெண்ணுக்கு வழங்க அழகு நிலையத்திற்கு உத்தரவிட்டது.