போலீஸ் நடைமுறையை பா.ஜனதா அரசு பாழாக்கிவிட்டது- குமாரசாமி கண்டனம்
போலீஸ் நடைமுறையை பா.ஜனதா அரசு பாழாக்கிவிட்டது என்று குமாரசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு: முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மண்டியாவில் குழந்தையுடன் ஆஸ்பத்திரிக்கு சென்ற தம்பதியை போலீசார் தாக்கியுள்ளனர். அதாவது தலைக்கவசம் அணியவில்லை என்று கூறி வண்டியின் சாவியை போலீசார் பறித்துள்ளனர். மனிதநேயத்திற்கு எதிரான இத்தகைய சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வது வருத்தம் அளிக்கிறது. கர்நாடகத்தில் போலீஸ் நடைமுறையை இந்த பா.ஜனதா அரசு பாழாக்கிவிட்டது என்பதற்கு இதுவே சாட்சி. போலீசாரின் செயலை கண்டிக்கிறேன். குழந்தையை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்ற தம்பதியிடம் போலீசார் இவ்வாறு நடந்து கொண்ட விதம் மோசமானது. அபராதத்தை குறிப்பிட்டு இதுபற்றி ஒன்னாளி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. பணம் கேட்ட போலீசாரின் செயல் போலீஸ் துறைக்கே தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆட்சியில் மனிதத்துவம் என்பது செத்துவிட்டது. அந்த தம்பதி தங்களின் நண்பரிடம் இருந்து பணம் பெற்று அபராதத்தை செலுத்தியுள்ளனர். அதன் பிறகே போலீசார் அவர்களை ஆஸ்பத்திரிக்கு செல்ல அனுமதித்துள்ளனர். அந்த போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இந்த விஷயத்தில் மூத்த அதிகாரிகள் உரிய கவனம் செலுத்த வேண்டும். இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் தடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
-