பசவண்ணரின் கொள்கை பாதையில் நடக்கும் பா.ஜனதா; பீதரில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேச்சு


பசவண்ணரின் கொள்கை பாதையில் நடக்கும் பா.ஜனதா; பீதரில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேச்சு
x

பசவண்ணரின் கொள்கை பாதையில் பா.ஜனதா நடப்பதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.

பெங்களூரு:

பீதரில் நடைபெற்ற பா.ஜனதாவின் விஜய சங்கல்ப யாத்திரை தொடக்க விழா பொதுக்கூட்டத்தில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேசியதாவது:-

கொரோனா நெருக்கடி

முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் அதிக கடன் வாங்கப்பட்டது. இதனால் மக்கள் மீது கடன் சுமை அதிகரித்தது. அந்த கட்சியினர் சாதி, மத விஷயங்களில் விரோத அரசியலை மேற்கொள்கிறார்கள். அந்த ஆட்சியில் கர்நாடகம் வளர்ச்சியில் பின்னோக்கி சென்றது. நாங்கள் தலித், பழங்குடியின சமூகங்களுக்கு இட ஒதுக்கீட்டை அதிகரித்துள்ளோம். இதையும் காங்கிரசார் குறை சொல்கிறார்கள்.

கொரோனா நெருக்கடி காலத்தில் மக்கள் வாழ தேவையான உணவு, மருந்துகள், தடுப்பூசி போன்றவற்றை பிரதமர் மோடி வழங்கினார். நாட்டின் பொருளாதார வளர்ச்சியை சரியான பாதையில் கொண்டு வந்து நிறுத்தியவர் மோடி. இதனால் 6½ சதவீத பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஒருவேளை கொரோனா காலத்தில் காங்கிரஸ் ஆட்சி இருந்திருந்தால், நாட்டில் நிலைமை மோசமாகி இருக்கும்.

பெரும்பான்மை பலம்

பிரதமர் மோடி தலைமையில் சுயமரியாதை தேசம் உருவாக்கப்பட்டுள்ளது. பசவண்ணரின் கொள்கை பாதையில் நடக்கும் ஒரே கட்சி பா.ஜனதா. நாட்டில் அடுத்த 25 ஆண்டுகளில் மகிழ்ச்சியான காலம் (அம்ரித் கால்) உருவாக்கப்படும். இதற்கு கர்நாடகத்தில் பா.ஜனதாவுக்கு பெரும்பான்மை பலம் கிடைக்க வேண்டும். பீதரில் துவரை அதிகமாக சாகுபடி செய்யப்படுகிறது.

அது நோயால் பாதிக்கப்பட்டு விளைச்சல் குறைந்துள்ளது. அதனால் துவரை விவசாயிகளுக்கு நிவாரணமாக ரூ.250 கோடி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உழைக்கும் பெண்களுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்குவதாக பட்ஜெட்டில் அறிவித்துள்ளோம்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.


Next Story