கர்நாடக சட்டசபை தேர்தலை பசவராஜ் பொம்மை தலைமையில் பா.ஜனதா சந்திக்கும்; எடியூரப்பா பேட்டி


கர்நாடக சட்டசபை தேர்தலை பசவராஜ் பொம்மை தலைமையில் பா.ஜனதா சந்திக்கும்; எடியூரப்பா பேட்டி
x

கர்நாடகத்தில் முதல்-மந்திரி மாற்றம் இல்லை என்றும், கர்நாடக சட்டசபை தேர்தலை பசவராஜ் பொம்மை தலைமையில் பா.ஜனதா சந்திக்கும் என்றும் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

பெங்களூரு:

மந்திராலயத்தில் எடியூரப்பா

ஆந்திர மாநிலம் மந்திராலயத்திற்கு முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா தனது குடும்பத்துடன் சென்றுள்ளார். நேற்று காலையில் அவர் ராகவேந்திரா சுவாமியை சந்தித்து ஆசி பெற்றார். முன்னதாக மந்திராலயத்தில் வைத்து எடியூரப்பா நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

கர்நாடகத்தில் முதல்-மந்திரி மாற்றப்படுவதாக வரும் தகவல்கள் உண்மை இல்லை. பசவராஜ் பொம்மையே இன்னும் 8 மாதங்கள் முதல்-மந்திரியாக இருப்பார். அடுத்த சட்டசபை தேர்தலையும் பசவராஜ் பொம்மை தலைமையில் பா.ஜனதா சந்திக்கும். அடுத்த ஆண்டு (2023) நடைபெறும் சட்டசபை தேர்தலிலும் பா.ஜனதா வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்கும். கர்நாடகத்தில் மீண்டும் ஆட்சிக்கு வந்து விடலாம் என்று காங்கிரஸ் கட்சியினர் கனவு காண்கிறார்கள். அவர்களது கனவு பலிக்காது.

21-ந் தேதி முதல் சுற்றுப்பயணம்

பா.ஜனதா மீண்டும் ஆட்சி அமைக்க மாநிலம் முழுவதும் வருகிற 21-ந் தேதியில் இருந்து நான் உள்பட அனைத்து தலைவர்களும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளோம். பெங்களூருவுக்கு வந்த அமித்ஷா, சட்டசபை தேர்தல் வியூகங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார். பா.ஜனதாவில் நான் புறக்கணிக்கப்படுவதாக கூறுவதில் உண்மை இல்லை. பா.ஜனதா கட்சி எனக்கு அனைத்து பதவிகளையும் கொடுத்துள்ளது.

சிகாரிபுரா தொகுதியில் விஜயேந்திரா போட்டியிட வாய்ப்பளிக்கும்படி பா.ஜனதா மேலிடத்திடம் அனுமதி கேட்டுள்ளேன். சிகாரிபுரா தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் விஜயேந்திரா வெற்றி பெறுவார். பா.ஜனதா பற்றியும், தலைவர்களை பற்றியும் காங்கிரஸ் கட்சியினர் தேவையில்லாத பொய் குற்றச்சாட்டுகளை கூறி மக்களை திசை திருப்ப முயற்சிக்கிறார்கள். வருகிற 21-ந் தேதி முதல் சுற்றுப்பயணம் மேற்கொள்வது குறித்து ஓரிரு நாட்களில் ஆலோசனை நடத்தி அறிவிக்கப்படும்.

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.


Next Story