பாறையில் மோதி அரபிக்கடலில் படகு மூழ்கியது; 7 மீனவர்கள் பத்திரமாக மீட்பு


பாறையில் மோதி அரபிக்கடலில் படகு மூழ்கியது; 7 மீனவர்கள் பத்திரமாக மீட்பு
x

உடுப்பியில் பாறையில் மோதி அரபிக்கடலில் மூழ்கிய படகில் இருந்து 7 மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

மங்களூரு;


உடுப்பி மாவட்டம் மல்பே துறைமுகத்தில் இருந்து லத்தீஷ் என்பவருக்கு சொந்தமான 'ஸ்ரீதுர்கா வைஷ்ணவி' என்ற படகில் 7 மீனவர்கள் கடந்த மாதம் (ஆகஸ்டு) 29-ந்தேதி அரபிக்கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் மீன்பிடித்துவிட்டு கடந்த 8-ந்தேதி கரைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

கங்கொல்லி கடற்கரை அருகே அவர்கள் வந்தபோது, பாறையில் படகு மோதியதாக தெரிகிறது. இதனால் படகுக்குள் தண்ணீர் புகுந்தது. இதன்காரணமாக படகு சிறிது, சிறிதாக கடலுக்குள் மூழ்க தொடங்கியது. மேலும் மீனவர்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர். இதுபற்றி அறிந்ததும் அங்கு மற்றொரு படகில் மீன்பிடித்து கொண்டிருந்தவர்கள் விரைந்து வந்தனர்.

அவர்கள் கடலுக்குள் மூழ்கிய படகை மீட்க நடவடிக்கை எடுத்தனர். ஆனால் எந்திரம் செயலிழந்ததால் அவர்களால் படகை மீட்க முடியவில்லை. இதனால் அந்த படகு முழுவதுமாக கடலுக்குள் மூழ்கியது. இதையடுத்து அந்த படகில் இருந்த 7 மீனவர்களை அவர்கள் பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

ஒரு வாரம் ஆழ்கடலில் தங்கி பிடித்து வந்த மீன்களும், படகும் கடலில் மூழ்கியதால் மீனவர்கள் மிகுந்த கவலையில் உள்ளனர். இதுகுறித்து கடலோர காவல் படையினர் விசாரித்து வருகிறார்கள். மேலும் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு தக்க நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Next Story