பெண்ணை கொன்றுவிட்டு தலைமறைவான வாலிபர் பிணமாக மீட்பு
விராஜ்பேட்டை அருகே பெண்ணை கொன்றுவிட்டு தலைமறைவான வாலிபர் பிணமாக மீட்கப்பட்டார்.
குடகு:-
வாளால் வெட்டி
குடகு மாவட்டம் விராஜ்பேட்டை அருகே நங்கலா கிராமத்தை சேர்ந்தவர் ஆர்த்தி (வயது 24). அதே கிராமத்தை சேர்ந்தவர் தம்மையா. தொழிலாளி. சம்பவத்தன்று ஆர்த்தி வீட்டிற்கு வந்த தம்மையா, மோட்டார் சைக்கிளில் ஆர்த்தியை வெளியே அழைத்து சென்றார். மறுநாள் காலையில் கிராமத்தின் புறநகர் பகுதியில் மர்மமான முறையில் ஆர்த்தி கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து விராஜ்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அவர்கள் ஆர்த்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் அவர் வாளால் வெட்டி கொலை செய்யப்பட்டது தெரிந்தது. அந்த பகுதியில் போலீசார் சோதனை செய்தபோது கொலை நடந்த இடத்தில் இருந்து சிறிது தூரத்தில் பண்ணை குட்டை அருகே ஒரு ஹெல்மெட், செல்போன், செருப்பு மற்றும் விஷ பாட்டில் ஆகியவை கிடந்தது.
அவற்றை கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவை தம்மையா என்பவருடையது என்பது தெரிந்தது. ஆர்த்தியை, தம்மையா கொலை செய்து இருக்கலாம் எனவும், விஷத்தை குடித்துவிட்டு பண்ணை குட்டையில் குதித்து இருக்கலாம் எனவும் அவர்கள் சந்தேகித்தனர்.
உடல் மீட்பு
ஆனால் ஆர்த்தியை கொலை செய்ய காரணம் என்ன என்பது முதலில் தெரியவில்லை. காதல் விவகாரம் காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தினர். இதற்கிடையே பண்ணை குட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் வாலிபரை தேடும் பணி நடைபெற்றது. மேலும், பண்ணை குட்டையில் தேங்கிய நீரை அகற்றும் பணி தீவிரமாக நடந்தது.
இந்த நிலையில் 2 நாட்கள் தேடுதல் வேட்டைக்கு பிறகு, திம்மையாவின் உடலை பண்ணை குட்டையில் இருந்து போலீசார் மீட்டனர். அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக விராஜ்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், பண்ணை குட்டையில் 3 அடிக்கும் மேல் சேறு இருந்தது. அதில் திம்மையாவின் உடல் புதைத்து இருந்தது. அவர் தற்கொலை செய்து கொண்டது உறுதியாகி உள்ளது என்றனர்.