குளத்தில் தவறி விழுந்து சிறுவன் சாவு காப்பாற்ற முயன்ற தாத்தாவும் உயிரிழந்த பரிதாபம்


குளத்தில் தவறி விழுந்து சிறுவன் சாவு   காப்பாற்ற முயன்ற தாத்தாவும் உயிரிழந்த பரிதாபம்
x
தினத்தந்தி 16 May 2023 12:15 AM IST (Updated: 16 May 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

ஆடு மேய்க்க சென்றபோது குளத்தில் தவறி விழுந்து சிறுவன் இறந்தான். அவனை காப்பாற்ற முயன்ற தாத்தாவும் பரிதாபமாக இறந்தார்.

சிக்கமகளூரு-

ஆடு மேய்க்க சென்றபோது குளத்தில் தவறி விழுந்து சிறுவன் இறந்தான். அவனை காப்பாற்ற முயன்ற தாத்தாவும் பரிதாபமாக இறந்தார்.

ஆடு மேய்க்கும் தொழிலாளி

சிக்கமகளூரு மாவட்டம் தரிகெரே தாலுகா வீட்டு வசதி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் நிங்கப்பா (வயது 71). தொழிலாளி. இவர் தனது வீ்ட்டில் ஆடு, மாடுகளை வளர்த்து வந்தார். நிங்கப்பா ஆடுகளை தொட்டகெரே பகுதியில் உள்ள குளத்தின் கரையோரம் மேய்ச்சலுக்கு கொண்டு செல்வது வழக்கம். இந்தநிலையில் நிங்கப்பா தனது பேரன் தனுசுடன் (14) ஆடுகளை மேய்ச்சலுக்காக தொட்டகெரே பகுதிக்கு அழைத்து சென்றார். அங்கு அவர்கள் ஆடுகளை மேய்த்துக் கொண்டு இருந்தனர்.

அப்போது, தனுஷ் குளத்தில் கால் கழுவ சென்றான். அந்த சமயத்தில் தனுஷ் எதிர்பாராதவிதமாக தவறி குளத்தில் விழுந்து தண்ணீரில் மூழ்கினான். இதனை பார்த்த நிங்கப்பா பேரனை காப்பாற்ற குளத்தில் குதித்தார். ஆனால் குளத்தில் ஆழம் அதிகமாக இருந்ததால் அவரும் தண்ணீரில் மூழ்கினார். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் தரிகெரே போலீசார், தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

2 பேர் சாவு

அதன் பேரில் போலீசார், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் குளத்தில் குதித்து நிங்கப்பா, தனுசை தேடினர். ஆனால் அவர்கள் கிடைக்கவில்லை. 1 மணி நேரம் போராடி அவர்கள் 2 பேரையும் தீயணைப்பு வீரர்கள் பிணமாக மீட்டனர். அவர்கள் 2 பேரும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தது தெரியவந்தது.

பின்னர் 2 பேரின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக தரிகெரெ அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தரிகெரே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆடு மேய்க்க சென்றபோது தாத்தா-பேரன் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story