அரிவாளால் வெட்டியதில் வாலிபர் கை துண்டானது
பெங்களூருவில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் அரிவாளால் வெட்டியதில் வாலிபரின் கை துண்டானது. அதனை நாய் தூக்கி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
பெங்களூரு:-
குடிபோதையில் தகராறு
பெங்களூரு குருபரஹள்ளியை சேர்ந்தவர் பிரஜ்வல் (வயது 21). இவர், தனது நண்பர்களுடன் குருபரஹள்ளியில் உள்ள மதுபான விடுதிக்கு மதுஅருந்த சென்றிருந்தார். குடிபோதையில் பிரஜ்வல், அவரது நண்பர்களுக்கும், மற்றொரு கும்பலுக்கும் இடையே திடீரென்று தகராறு ஏற்பட்டது. ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டனர். இதையடுத்து, மதுபான விடுதி ஊழியர்கள், இருதரப்பை சேர்ந்தவர்களையும் சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையில், பிரஜ்வல் தனது நண்பர்களுடன் வரும்போது, எதிர்கோஷ்டியை சேர்ந்த கும்பலினர் ஆயுதங்களுடன் வந்தனர். இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த பிரஜ்வல்லின் நண்பர்கள் அங்கிருந்து ஓடிவிட்டார்கள். மர்மநபர்களிடம் பிரஜ்வல் மட்டும் சிக்கி கொண்டார். உடனே அந்த கும்பலினரிடம் இருந்து பிரஜ்வல் தப்பிக்க முயன்றும் முடியாமல் போனது.
கை துண்டானது
இந்த நிலையில், மர்மநபர்கள் பிரஜ்வல்லை அரிவாளால் வெட்டினார்கள். இதில், அவரது வலது கை துண்டானது. ரத்த வெள்ளத்தில் அவர் துடிதுடித்தார். உடனே அங்கிருந்து மர்ம
நபர்கள் ஓடிவிட்டனர். இதற்கிடையில், துண்டாகி கிடந்த கையை ஒரு தெருநாய் தூக்கி கொண்டு ஓடிவிட்டது. பின்னா உயிருக்கு போராடிய பிரஜ்வல் விக்டோரியா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்ககப்பட்டு வருகிறது.
நாய் தூக்கி சென்ற கை சிக்கவில்லை என்று தெரிகிறது. இந்த மோதல் மற்றும் பிரஜ்வல்லின் கையை நாய் தூக்கி செல்லும் காட்சிகள் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. அந்த காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து மகாலட்சுமி லே-அவுட் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடிவருகிறார்கள்.