முகத்தில் தீக்காயமடைந்த பெண் ஊழியரின் திருமணத்தை நிறுத்திய மாப்பிள்ளை வீட்டார்


முகத்தில் தீக்காயமடைந்த பெண் ஊழியரின் திருமணத்தை நிறுத்திய மாப்பிள்ளை வீட்டார்
x

பெங்களூரு மாநகராட்சி அலுவலகத்தில் நடந்த தீ விபத்தில் முகத்தில் காயமடைந்த பெண் ஊழியருக்கு நடக்க இருந்த நிச்சயதார்த்தத்தை மாப்பிள்ளை வீட்டார் ரத்து செய்ததுடன் திருமணத்தை நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

பெங்களூரு:-

தீ விபத்தில் முகத்தில் காயம்

பெங்களூரு மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் உள்ள ஆவணங்கள் பாதுகாப்பு கட்டிடத்தில் கடந்த 11-ந்தேதி மாலையில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் என்ஜினீயர்கள், டி-குரூப் ஊழியர்கள், பெண் ஊழியர்கள் உள்பட 9 பேர் காயம் அடைந்தனர். அதில், ஒரு பெண் ஊழியரின் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டு இருந்தது. இதற்காக அவர் விக்டோரியா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாக விக்டோரியா ஆஸ்பத்திரி டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், தீ விபத்து காரணமாக மாநகராட்சி பெண் ஊழியரின் திருமணமே நின்று போய் உள்ளது.

நிச்சயதார்த்தம் ரத்து

அதாவது தீ விபத்திற்கு உள்ளான பெண் ஊழியருக்கு, அவரது பெற்றோர் மாப்பிள்ளை பார்த்து வந்தனர். அதன்படி, சமீபத்தில் அந்த பெண் ஊழியரை ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் நபருக்கு பிடித்திருந்தது. இதையடுத்து, இருவீட்டாரும் அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க சம்மதம் தெரிவித்து இருந்தனர். இன்னும் சில நாட்களில் மாநகராட்சி பெண் ஊழியருக்கும், அந்த வாலிபருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற இருந்தது.

ஆனால் கடந்த 11-ந் தேதி தீ விபத்தில் பெண் ஊழியரின் முகத்தில் காயம் ஏற்பட்டதாலும் நிச்சயதார்த்தத்திற்கு முன்பு இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளதாகவும் கூறி மாப்பிள்ளை வீட்டார் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.

பெரும் பரபரப்பு

இதனால் பெண் ஊழியருக்கு நடக்க இருந்த திருமண நிச்சயதார்த்தம் ரத்து செய்யப்பட்டு இருப்பதாகவும், தீ விபத்தால் மகளின் எதிர்காலமே பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். வெந்த புண்ணில் வேல் பாய்ந்த கதையாக பெங்களூருவில் நடந்துள்ள இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.


Next Story