தக்காளி விற்று ஒரே நாளில் லட்சாதிபதியான சகோதரர்கள் -ரூ.38 லட்சம் வருவாய் கிடைத்தது
கோலார் சகோதரர்கள் 2 பேர் ஒரே நாளில் ரூ.38 லட்சம் தக்காளி விற்பனை செய்து லட்சாதிபதியானது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
கோலார் தங்கவயல்:-
தக்காளி சாகுபடி
கர்நாடகத்தில் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களாக ஒரு தக்காளி ரூ.100-க்கு மேல் விற்று வந்த நிலையில் தற்போது விலை சற்று குறைந்துள்ளது. விலை அதிகரித்ததால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்தாலும், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதாவது அவர்களுக்கு அதிக அளவில் லாபம் கிடைத்து வருகிறது. அதன்படி கோலார் ஏ.பி.எம்.சி.யார்டு மார்க்கெட்டில் பேத்தமங்களாவை சேர்ந்த பிரபாகர் குப்தா மற்றும் அவரது சகோதரர் இணைந்து தக்காளியை ரூ.38 லட்சம் வரை விற்பனை செய்து லாபம் சம்பாதித்துள்ளனர்.
விவசாயிகளான இவர்கள் சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் தக்காளி சாகுபடி செய்து வருகின்றனர். இவர்கள் நிலத்தில் விளையும் தக்காளியை கோலார் ஏ.பி.எம்.சி.யார்டு மார்க்ெகட்டிற்கு வந்து விற்பனை செய்வது வழக்கம்.
ரூ.38 லட்சத்துக்கு விற்பனை
அதன்படி கடந்த கடந்த 11-ந் தேதி சகோதரர்கள் இருவரும் கோலார் மார்க்கெட்டில் தக்காளியை விற்பனை செய்தனர். அதாவது தலா 15 கிலோ எடை கொண்ட 2 ஆயிரம் பெட்டி தக்காளியை விற்பனைக்காக வைத்திருந்தனா். வழக்கம்போல ஏலம் விடப்பட்டதில் சகோதரர்களின் தக்காளிக்கு மவுசு அதிகமாக இருந்தது.
அதன்படி 2 ஆயிரம் பெட்டி தக்காளி ரூ.38 லட்சம் வரை ஏலம்போனது. அதாவது ஓரு பெட்டி தக்காளி ரூ.1,900-க்கு விலைபோனது.
1,000 டன்
இதுகுறித்து விவசாயி பிரபாகர் குப்தா கூறியதாவது:-
கடந்த 2021-ம் ஆண்டு தலா 15 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி தக்காளி ரூ.800-க்கு விற்பனை செய்யப்பட்டது. அப்போது உரிய விலை கிடைக்கவில்ைல. இந்தமுறை தக்காளி வரத்து குறைந்திருப்பதால், எங்கள் தக்காளிக்கு மவுசு அதிகமானது. அதாவது வழக்கமாக ஒரு நாளைக்கு கோலார் மார்க்கெட்டிற்கு 8 ஆயிரம் டன் தக்காளி விற்பனைக்காக வரும்.
ஆனால் தற்போது 1000 டன் தான் தக்காளி வரத்து உள்ளது. இதன் காரணமாக ஒரு பெட்டி தக்காளி ரூ.1,900 வரை ஏலம் போனது. அதன்படி 2 ஆயிரம் பெட்டி தக்காளி ரூ.38 லட்சத்துக்கு ஏலம் போனது. இதனால் எங்களுக்கு போதிய லாபம் கிடைத்துள்ளது. இது மகிழ்ச்சி அளிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.