காங்கிரஸ் கட்சியில் மக்கள் செல்வாக்கு மிக்க தலைவர்கள் இல்லை


காங்கிரஸ் கட்சியில் மக்கள் செல்வாக்கு மிக்க தலைவர்கள் இல்லை
x

காங்கிரஸ் கட்சியில் மக்கள் செல்வாக்கு பெற்ற திறன்மிக்க தலைவர்கள் இல்லை என்று பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் அருண்சிங் கூறியுள்ளார்.

பெங்களூரு:-

பெங்களூருவில் நேற்று நடைபெற்ற கர்நாடக பா.ஜனதாவின் சிறப்பு செயற்குழு கூட்டத்தில் மேலிட பொறுப்பாளர் அருண்சிங் பேசியதாவது:-

வலுவான தொண்டா்கள்

கர்நாடக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் இந்த கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது. மக்களின் விருப்பம், கட்சி நிர்வாகிகளின் செயல்பாடுகளை பார்க்கும்போது, கர்நாடகத்தில் பா.ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வருவது உறுதி. பா.ஜனதா 150 தொகுதிகளில் வெற்றி பெறும். நமது கட்சியில் வலுவான கட்சி தொண்டர்கள் உள்ளனர். பா.ஜனதா தொடர்ச்சியாக சமூக சேவை மற்றும் நாட்டின் சேவையில் தன்னை ஈடுபடுத்தி கொண்டுள்ளது.

நமது கட்சியில் பூத் குழுக்கள் சிறப்பாக செயல்படுகின்றன. இத்தகைய கட்டமைப்பு வேறு கட்சிகளில் இல்லை. விஜய சங்கல்ப, ஜனசங்கல்ப யாத்திரைகள் வெற்றிகரமாக நடைபெற்றன. இதற்காக நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். ஏழை மக்களுக்கு வீடுகள் கட்டி கொடுத்துள்ளோம், தடுப்பூசியை இலவசமாக வழங்கியுள்ளோம், 80 கோடி ஏழை மக்களுக்கு ரேஷன் பொருட்களை இலவசமாக வழங்கியுள்ளோம்.

மக்கள் செல்வாக்கு

காங்கிரஸ் கட்சியில் மக்கள் செல்வாக்கு படைத்த, திறன்மிக்க தலைவர்கள் யாரும் இல்லை. காங்கிரசை விட்டு விலகுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. தொலைநோக்கு பார்வை இல்லாத கட்சி காங்கிரஸ். ராகுல் காந்தி என்ன சொல்கிறார் என்பது யாருக்கும் புரிவது இல்லை. சித்தராமையா ஆட்சியில் இந்துக்கள் கொல்லப்பட்டனர். பி.எப்.ஐ. அமைப்பை ஊக்குவித்தனர்.

காங்கிரஸ் கட்சியினர் எப்போதும் தங்களின் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது இல்லை. ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் கொடுத்த வாக்குறுதிகளை இதுவரை நிறைவேற்றவில்லை. மத்திய-மாநில அரசுகளின் சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்லும் பணியை நாம் தீவிரமாக மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அருண்சிங் பேசினார்.

நளின்குமார் கட்டீல்

மாநில பா.ஜனதா தலைவர் நளின்குமார் கட்டீல் பேசியதாவது:-

கர்நாடகத்தில் பா.ஜனதா அலை வீசுகிறது. அதனால் 150 தொகுதிகளில் நமது கட்சி வெற்றிபெறும் என்ற நம்பிக்கை உள்ளது. பூத் விஜய, பூத் சங்கல்ப இயக்கம் வெற்றி பெற்றுள்ளது. இரட்டை என்ஜின் அரசு சிறப்பான முறையில் செயலாற்றி வருகிறது. நமது கட்சி எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகளுக்கு தலா ரூ.ஆயிரம் கோடி அளவுக்கு நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ரைத வித்யா நிதி மூலம் 11 லட்சம் விவசாயிகளின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. நாட்டில் முதல் முறையாக பஞ்சாரா சமூகத்தை சேர்ந்த 50 ஆயிரம் பேருக்கு ஒரே நாளில் வீட்டு உரிமை பத்திரம் வழங்கினோம். பால் கூட்டுறவு வங்கியை தொடங்கியுள்ளோம். காங்கிரஸ் கட்சி தலைவர்கள் முதல்-மந்திரி பதவிக்காக யாத்திரை நடத்துகிறார்கள். அக்கட்சியை சேர்ந்த ஒரு முதல்-மந்திரி வேட்பாளர் தொகுதியை தேடி கொண்டிருக்கிறார்.

பஞ்சர் ஆகிவிடும்

மூத்த தலைவர்கள் பரமேஸ்வர், கே.எச்.முனியப்பா ஆகியோர் அதிருப்தியில் உள்ளனர். அவர்களால் காங்கிரசின் பஸ் பஞ்சர் ஆகிவிடும். மத்திய பட்ஜெட்டில் பத்ரா மேலணை திட்டத்திற்கு ரூ.5,300 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த முறை கர்நாடகத்திற்கு 8 பத்ம விருதுகள் கிடைத்துள்ளன. இவ்வாறு நளின்குமார் கட்டீல் பேசினார்.


Next Story