ராஜகால்வாயை ஆக்கிரமித்து கட்டிய வீட்டை இடிக்க எதிர்ப்பு: பெட்ரோலை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்ற தம்பதியால் பரபரப்பு
பெங்களூருவில், ராஜகால்வாயை ஆக்கிரமித்து கட்டிய வீட்டை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து பெட்ரோலை உடலில் ஊற்றி தம்பதி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த தம்பதியை போலீசார் கைது செய்து உள்ளனர்.
பெங்களூரு: பெங்களூருவில், ராஜகால்வாயை ஆக்கிரமித்து கட்டிய வீட்டை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து பெட்ரோலை உடலில் ஊற்றி தம்பதி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த தம்பதியை போலீசார் கைது செய்து உள்ளனர்.
ராஜகால்வாய் ஆக்கிரமிப்பு
பெங்களூருவில் கடந்த ஆகஸ்டு மாதம் கொட்டி தீர்த்த கனமழையால் நகரில் உள்ள ஏராளமான குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. மக்களின் உடைமைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. வீடுகளை இழந்த மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் பெங்களூருவில் வெள்ள பாதிப்புக்கு ராஜகால்வாய் ஆக்கிரமிப்புகளே காரணம் என்று தெரியவந்தது.
இதனால் ராஜகால்வாய்களை ஆக்கிரமித்து கட்டிய கட்டிடங்கள், வீடுகள், நிறுவனங்களை இடித்து அகற்ற மாநகராட்சி அதிகாரிகளுக்கு, முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உத்தரவிட்டு இருந்தார். இந்த உத்தரவு எதிரொலியாக ராஜகால்வாய் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள், வீடுகளை இடித்து அகற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இடித்து அகற்றும் பணி
பெங்களூரு மாநகராட்சிக்கு உட்பட்ட மகாதேவபுரா மண்டலத்தில் தான் ராஜகால்வாய் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அதிகமாக இருப்பது தெரியவந்து உள்ளது. இதனால் அந்த மண்டலத்தில் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்றும் பணி நடந்து வருகிறது.
இந்த நிலையில் ஏழை, எளிய மக்களின் வீடுகளை மட்டும் குறிவைத்து மாநகராட்சி அதிகாரிகள் இடித்து வருவதாகவும், அடுக்குமாடி குடியிருப்புகள், ஐ.டி.நிறுவனங்கள் செய்த ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.
வீட்டை இடிக்க எதிர்ப்பு
இந்த நிலையில் மகாதேவபுரா மண்டலத்திற்கு உட்பட்ட கே.ஆர்.புரம் காயத்ரி லே-அவுட்டில் ராஜகால்வாயை ஆக்கிரமித்து கட்டிய வீடுகளை இடிக்கும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர். அப்போது காயத்ரி லே-அவுட்டில் வசித்து வரும் சுனில்-சோனு தம்பதி ராஜகால்வாயை ஆக்கிரமித்து வீடு கட்டி இருந்தது தெரியவந்தது.
இதனால் நேற்று சுனில்-சோனு தம்பதியின் வீட்டின் பின்பகுதி சுவரில் உள்ள தூணை இடிக்க மாநகராட்சி அதிகாரிகள் பொக்லைன் எந்திரத்துடன் சென்றனர். வீட்டின் பின்பக்க தூணை இடித்தால், வீடு இடிந்துவிடும் என்பதால் வீட்டின் தூணை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து சுனில்-சோனு தம்பதி, மாநகராட்சி அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர்.
தீக்குளிக்க முயற்சி
ஆனாலும் வீட்டின் தூணை இடிக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். இதனால் ஆத்திரமடைந்த சுனிலும், சோனுவும் திடீரென்று பெட்ரோல் நிரப்பிய கேனுடன் வீட்டின் பின்பக்க சுற்றுச்சுவரை ஏறி குதித்து சாக்கடை கால்வாய் மீது நின்றனர். பின்னர் அவர்கள் தங்களது உடல் மீது பெட்ரோலை ஊற்றினர். மேலும் எங்கள் வீட்டை இடித்தால் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வோம் என்று மிரட்டல் விடுத்தனர்.
இதனால் தம்பதியிடம் கே.ஆர்.புரம் போலீசார், மாநகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது முதல்-மந்திரி இங்கு வர வேண்டும்.அவர் வந்து உங்கள் வீட்டை இடிக்க மாட்டோம் என்று உறுதி அளிக்க வேண்டும் என்று தம்பதி கூறினர்.
அவர்களிடம் போலீசார் 2 மணி நேரத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதற்கு பலன் கிடைக்கவில்லை. மாறாக எங்களது பக்கத்தில் வந்தால் தீக்குளித்து விடுவோம் என்று தம்பதி கூறினர். இதையடுத்து அங்கு வந்த தீயணைப்பு படையினர் உதவியுடன் தற்கொலைக்கு முயன்ற தம்பதியை போலீசார் மீட்டனர்.
கைது-பரபரப்பு
தம்பதி மீது தீயணைப்பு படையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். இதையடுத்து அவர்களை பாதுகாப்பாக மீட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில் பணி செய்யவிடாமல் தடுத்ததாகவும், தற்கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தம்பதியை போலீசார் கைது செய்தனர்.
அவர்கள் 2 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு உண்டானது.
அகற்றப்பட்டதுThe couple tried to set themselves on fire by pouring petrol on their bodies
இதற்கிடையே சுனில்-சோனு தம்பதி ஆக்கிரமித்து கட்டியிருந்த தூணை மாநகராட்சி அதிகாரிகள் நேற்று இடித்து அகற்றினர்.
ராஜகால்வாயை ஆக்கிரமித்து வீடு கட்டியது தெரியாது
தற்கொலைக்கு முயன்ற சுனில்-சோனு தம்பதி கூறுகையில், "கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.40 லட்சம் கடன் வாங்கி இந்த வீட்டை கட்டினோம். ராஜகால்வாயை ஆக்கிரமித்து வீடு கட்டி உள்ளோம் என்று எங்களுக்கு தெரியாது. எங்களிடம் இந்த நிலத்தை விற்றவர் மோசடி செய்து விட்டார். நாங்கள் ராஜகால்வாயை ஆக்கிரமித்து வீடு கட்ட உள்ளோம் என்று வீடு கட்ட அனுமதி அளித்த அதிகாரிகள் ஏன் முன்கூட்டியே சொல்லவில்லை. ஏழை, எளிய மக்களின் வீடுகளை மட்டும் தான் இடிக்கிறார்கள். பணக்காரர்கள், தொழில் அதிபர்கள் வீடுகள், கட்டிடங்கள் மீது கை வைக்க பயப்படுகிறார்கள். எங்கள் வீட்டின் தூணை மட்டும் இடிக்க உள்ளதாக கூறுகிறார்கள். தூணை இடித்தால் வீடு சரிந்து விழுந்து விடும்" என்றனர்.
மிரட்டலுக்கு பயப்பட மாட்டோம்- மந்திரி சொல்கிறார்
தம்பதி தீக்குளிக்க முயன்றது குறித்து கே.ஆர்.புரம் தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ.வும், கர்நாடக நகர வளர்ச்சி துறை மந்திரியுமான பைரதி பசவராஜ் கூறும்போது, "கே.ஆர்.புரம் தொகுதியில் ராஜகால்வாய் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்றும் பணி தொடர்ந்து நடக்கும். எந்த மிரட்டலுக்கும் பயப்பட மாட்டோம். ராஜகால்வாய் ஆக்கிரமிப்பால் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கும் அபாயம் உள்ளது. ஒரு குடும்பத்திற்காக ஆயிரம் குடும்பங்களை பாதிக்க விடமாட்டோம். யாராக இருந்தாலும் சரி, ராஜகால்வாய் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்றியே தீருவோம்" என்றார்.