தசரா யானை பலராமாவை துப்பாக்கியால் சுட்ட விவசாயி


தசரா யானை பலராமாவை துப்பாக்கியால் சுட்ட விவசாயி
x
தினத்தந்தி 18 Dec 2022 12:15 AM IST (Updated: 18 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

விளைநிலத்துக்குள் புகுந்ததால் தசரா யானை பலராமாவை துப்பாக்கியால் சுட்ட விவசாயியை வனத்துறையினர் கைது செய்தனர்.

பெங்களூரு:

பலராமா யானை

கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டம் பிரியப்பட்டணா தாலுகா பீமனகட்டே பகுதியில் யானைகள் பயிற்சி முகாம் உள்ளது. இந்த பயிற்சி முகாமில் ஏராளமான யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதேபோல், உலக பிரசித்தி பெற்ற ைமசூரு தசரா ஊர்வலத்தில் 13 முறை தங்க அம்பாரியை சுமந்த புகழ்பெற்ற பலராமா யானையும் இந்த முகாமில் தான் பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்த முகாமில் பராமரிக்கப்பட்டு வரும் பலராமா உள்ளிட்ட யானைகள் இரவு நேரத்தில் வனப்பகுதியில் விடப்படுவது வழக்கம். இதேபோல், கடந்த 15-ந்தேதி இரவு பலராமா யானை வனப்பகுதியில் விடப்பட்டது.

துப்பாக்கி சூடு

அந்த யானை, ஆலலூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி சுரேஷ் என்பவரின் விளைநிலத்துக்குள் புகுந்ததாக தெரிகிறது. அப்போது அங்கு காவல் பணியில் ஈடுபட்டிருந்த சுரேஷ், இதனை பார்த்து ஆத்திரமடைந்தார். பின்னர், தான் வைத்திருந்த ஒற்றை குழல் துப்பாக்கி மூலம் பலராமா யானையை நோக்கி சுட்டார். இதில் பலராமா யானையின் வலது முன்காலில் குண்டு பாய்ந்தது.

இதனால் பலராமா யானை, பிளிறியபடி அங்கிருந்து ஓடியது. இதுபற்றி அறிந்ததும் வனத்துறை அதிகாரிகள் உடனடியாக கால்நடை மருத்துவர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, கால்நடை மருத்துவர் ரமேஷ் தலைமையிலான குழுவினர் பீமனகட்டே முகாமிற்கு வந்து பலராமா யானையின் முன்காலில் இருந்த குண்டை அகற்றினர். தொடர்ந்து யானைக்கு மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

விவசாயி கைது

இதுகுறித்து பிரியப்பட்டணா வனத்துறையினர் வன விலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பலராமா யானையை துப்பாக்கியால் சுட்ட விவசாயி சுரேைச நேற்று முன்தினம் கைது செய்தனர். பின்னர் அவரிடம் இருந்து துப்பாக்கி மற்றும் 4 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

தசரா யானை பலராமா துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள விலங்குகள் நல ஆர்வலர்கள், கைதான சுரேஷ் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

13 முறை தங்க அம்பாரியை சுமந்த பலராமா

63 வயதான பலராமா யானை, கடந்த 1987-ம் ஆண்டு குடகு மாவட்டம் சோமவார்பேட்டை அருகே கட்டேபுரா கிராமத்தையொட்டி உள்ள வனப்பகுதியில் பிடிக்கப்பட்டது. இதையடுத்து பீமனகட்டே முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு கும்கியாக பலராமாவுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. அதன்பிறகு 1994-ம் ஆண்டு முதல் உலக புகழ்பெற்ற மைசூரு தசரா விழாவில் பலராமா யானை பங்கேற்றது. கடந்த 1999-ம் ஆண்டு மைசூரு தசரா ஊர்வலத்தில் சாமுண்டீஸ்வரி அம்மன் வீற்றிருக்கும் 750 கிலோ எடை கொண்ட தங்க அம்பாரியை சுமக்கும் அதிர்ஷ்டம் பலராமாவுக்கு கிடைத்தது. அதன்பிறகு 1999-ம் ஆண்டு முதல் கடந்த 2011-ம் ஆண்டு வரை தொடர்ந்து 13 முறை தசரா ஊர்வலத்தில் பலராமா யானை, 750 கிலோ தங்க அம்பாரியை சுமந்து கம்பீர நடைபோட்டு வந்தது. அதன்பிறகு வயது முதிர்வு காரணமாக 2012-ம் ஆண்டு முதல் தங்க அம்பாரியை சுமப்பதில் இருந்து ஓய்வு பெற்றது. இதையடுத்து அர்ஜூனா யானை தங்க அம்பாரியை சுமந்தது.


Next Story