தந்தையே மகனை கூலிப்படையை ஏவி கொன்று புதைத்தது அம்பலம்


தந்தையே மகனை கூலிப்படையை ஏவி கொன்று புதைத்தது அம்பலம்
x
தினத்தந்தி 8 Dec 2022 12:15 AM IST (Updated: 8 Dec 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

வாலிபர் மாயமானதாக தேடப்பட்ட வழக்கில் அதிரடி திருப்பமாக அவரை அவரது தந்தையே கூலிப்படையை ஏவி கொன்றது அம்பலமாகி உள்ளது. வாலிபரின் உடலை தோண்டி எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

உப்பள்ளி:-

வாலிபர் மாயம்

உப்பள்ளி கேஷ்வாப்பூர் பகுதியை சேர்ந்தவர் பரத் ஜெயின். தொழில் அதிபர். இவரது மகன் அகில் ஜெயின் (வயது 36). கடந்த 1-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற இவர் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. இதனால் பரத் ஜெயின் மற்றும் உறவினர்கள், அகில் ஜெயினை பல இடங்களில் தேடினர். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து கேஷ்வாப்பூர் போலீசில் உறவினர்கள் புகார் அளித்தனர்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அகில் ஜெயினை தேடி வந்தனர். ஆனால் போலீசாருக்கும் துப்பு கிடைக்கவில்லை. இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அகிலின் உறவினர் மனோஜ் என்பவர் தனது செல்போனுக்கு வீடியோ ஒன்று வந்ததாகவும், அதில் மலை உச்சியில் இருந்து அகில் தற்கொலை செய்து கொள்வதுபோன்று பாவனை செய்திருப்பதாகவும் கூறி கேஷ்வாப்பூர் போலீசில் கூறினார். அந்த வீடியோ மற்றும் எந்த எண்ணில் இருந்து வீடியோ அனுப்பட்டது என்பது குறித்து போலீசார் விசாரித்தனர்.

போலீஸ் விசாரணை

மேலும் செல்போன் சிக்னல் மூலம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அந்த செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து ேபாலீசார் வீடியோவில் இருந்த மலைக்கு சென்று போலீசார் விசாரித்தனர். அங்கும் போலீசாருக்கு எந்த தடயமும் சிக்கவில்லை. இந்த நிலையில் அகில் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்க தொடங்கினர். அதன்படி அகிலின் உறவினர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். மேலும் அவர்களது செல்போன்களையும் ஆய்வு செய்தனர்.

அப்போது அகிலின் தந்தை பரத்தின் வாட்ஸ்-அப்புக்கு புதிய எண்களில் இருந்து குறுந்தகவல்கள் வந்திருந்தது. இதனால் அவரை பிடித்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது அகிலை கூலிப்படையை ஏவி கொலை செய்து உடலை புதைத்ததை ஒப்பு கொண்டார். மேலும் அகில் உடல் புதைக்கப்படும் படம் அவரது செல்போனில் இருந்தது.

கூலிப்படையை ஏவிய தந்தை

இதுகுறித்து அவரிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது அகில், மது குடிக்கும் பழக்கத்துக்கு அடிமையாகி இருந்தார். மேலும் சூதாட்டத்தில் ஈடுபட்டு அகில் பல லட்ச ரூபாயை இழந்திருந்தார். அதனால் பரத் ஜெயின் அகிலை கண்டித்துள்ளார். அப்போது அகில், தனது தந்தை பரத் ஜெயினை கொலை செய்துவிடுவதாக மிரட்டி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பரத் ஜெயின், அகிலை கொலை செய்ய முடிவு செய்தார்.

அதன்படி பரத் ஜெயின், கூலிப்படையை சேர்ந்த 5 பேருக்கு ரூ.10 லட்சம் கொடுத்து அகிலை கொலை செய்ததாக கூறினார். அதன்படி கூலிப்படையை சேர்ந்தவர்களும் அகிலை கொலை செய்தனர். பின்னர் உடலை கல்கட்டகி பகுதியில் புதைத்துவிட்டு செல்போனில் படம் எடுத்து அவர்கள் பரத் ஜெயினுக்கு அனுப்பி வைத்துள்ளது தெரியவந்தது.

உடல் தோண்டி எடுப்பு

இதையடுத்து போலீசார் கல்கட்டகிக்கு விரைந்து சென்று அகில் புதைக்கப்பட்ட இடத்தை பார்வையிட்டனர். பின்னர் அவரது உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து கேஷ்வாப்பூர் போலீசார் பரத் ஜெயின் மற்றும் கூலிப்படையை சேர்ந்த 2 பேரை கைது செய்துள்ளனர்.

மேலும் தலைமறைவாக உள்ள கூலிப்படையை சேர்ந்த 3 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள். தந்தையே மகனை கூலிப்படையை ஏவி கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story