ஏரி உடைந்ததால் கிராமத்திற்குள் புகுந்த வெள்ளம்


ஏரி உடைந்ததால் கிராமத்திற்குள் புகுந்த வெள்ளம்
x
தினத்தந்தி 20 Oct 2022 12:15 AM IST (Updated: 20 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

சிக்பள்ளாப்பூரில் தொடர் கனமழை பெய்து வருகிறது. ஏரி உடைந்ததால் கிராமத்திற்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் பாதிக்கப்பட்ட கிராம மக்கள் பள்ளிக்கூடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

கோலார் தங்கவயல்:

கனமழை

சிக்பள்ளாப்பூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏரிகள் நிரம்பி வழிகிறது. இந்த நிலையில் கவுரிபிதனூர் தாலுகாவில் உள்ள கெங்கெரே ஏரியில் நேற்று முன்தினம் இரவு உடைப்பு ஏற்பட்டது. ஏரியின் கரை உடைந்து தண்ணீர் ஆர்ப்பரித்து வெளியேறின. அந்த தண்ணீர் அங்குள்ள விளைநிலங்களில் புகுந்தன. இதனால் ஏரியை சுற்றி அமைந்திருக்கும் விளைநிலங்களில் பயிரிடப்பட்டு உள்ள பயிர்கள் நாசமாகின.

அத்துடன் கெங்கெரே கிராமத்திற்குள்ளும் தண்ணீர் புகுந்ததால் அங்கு வசிக்கும் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர். தகவல் அறிந்த அதிகாரிகள் நள்ளிரவு ஒரு மணி அளவில் அங்கு வந்தனர். மேலும் மாநில பேரிடர் மீட்டு படையினரும் அங்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் படகுகள் மூலம் மக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து சென்றனர்.

பள்ளிக்கூடங்களில்...

தற்போது அந்த கிராம மக்கள் அரசு பள்ளிக்கூடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அரசு அதிகாரிகள் சுமார் 250-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகின்றனர். ஏரிக்கரை உடைந்ததால் கெங்கெரே கிராமத்தில் இருந்து மற்ற கிராமங்களுக்கு செல்லும் சாலைகள் முழுவதும் சேதம் அடைந்துள்ளன.

இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு உள்ளது. ஏரிக்கரை உடைந்ததால் சுமார் 300 ஹெக்டேர் நிலப்பரப்பில் சாகுபடி செய்திருந்த விளைப்பயிர்கள் நாசமானதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மந்திரி எம்.டி.பி. நாகராஜ் ஆய்வு

இந்த நிலையில் நேற்று மாவட்ட பொறுப்பு மந்திரி எம்.டி.பி. நாகராஜ் கெங்கெரே கிராமத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் பாதிக்கப்பட்ட மக்களிடம் குறைகளையும் கேட்டறிந்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கடந்த 40 ஆண்டுகளுக்கு பின் சிக்பள்ளாப்பூர் மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால், ஏரிகள் நிரம்பி வழிவதால் அவற்றை சரி செய்யும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். மேலும், இதுபோன்ற பாதிப்புகள் நடைபெறாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும். சிக்பள்ளாப்பூர்மாவட்டத்தில் 800 ஏரிகள் உள்ளன. அவற்றை புனரமைத்து உடைப்பு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இழப்பீடு

ஏரியில் உடைப்பு ஏற்பட்டதால் விளைப்பயிர்கள் நாசமாகி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தேவையான இழப்பீட்டு தொகை வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story