ஜாமீனில் வந்து தலைமறைவானவர் 5 ஆண்டுகளுக்கு பிறகு சிக்கினார்
பெங்களூருவில் தொழில்அதிபரை கொன்று புராதன நகைகளை கொள்ளையடித்த வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்து தலைமறைவானவர் 5 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டுள்ளார்.
பெங்களூரு:
தொழில்அதிபர் கொலை
பெங்களூரு ஆடுகோடி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட லக்கசந்திரா லே-அவுட், 10-வது மெயின் ரோடு, 9-வது கிராஸ் பகுதியில் வசித்து வந்தவா் உதய்ராஜ் சிங், தொழில்அதிபர். இவரது மனைவி சுசிலா. இந்த தம்பதியிடம் புராதன காலத்தை சேர்ந்த தங்கம், வைரம் மற்றும் வஜ்ர நகைகள் இருந்தது. அந்த நகைகளை உதய்ராஜ் விற்பனை செய்ய முடிவு செய்திருந்தார். இதற்கிடையில், கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் 25-ந் தேதி உதய்ராஜ் வீட்டிற்குள் புகுந்த மா்மநபர்கள், அவரை கழுத்து அறுத்து கொலை செய்திருந்தனர்.
அவரது மனைவி சுசிலா படுகாயத்துடன் உயிர் தப்பித்து இருந்தாா். உதய்ராஜ் வீட்டில் இருந்த புராதன காலத்தை சேர்ந்த நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றிருந்தனர். இதுகுறித்து ஆடுகோடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது புராதன நகைகளுக்காக உதய்ராஜை கொலை செய்திருப்பதும், அவரது மனைவியை கொலை செய்ய முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து, கொலையாளிகளை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு இருந்தது.
5 ஆண்டுகளாக தலைமறைவு
பின்னர் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் அபிஷேக், மது என்ற மதுசூதன், கிரண், சதீஸ், தீபில்குமார், ஸ்ரீதா், அமித்குமார் ஆகிய 7 பேரை கைது செய்து சிறையில் அடைத்திருந்தனர். அவர்களிடம் இருந்து உதய்ராஜ் வீட்டில் கொள்ளையடித்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகள் மீட்கப்பட்டு இருந்தது. இதற்கிடையில், கடந்த 2017-ம் ஆண்டு மே மாதம் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த மது தலைமறைவாகி விட்டார். அவரை பற்றிய எந்த தகவலும் போலீசாருக்கு கிடைக்காமல் இருந்தது.
அவரை கைது செய்ய கோர்ட்டும் பிடிவாரண்டு பிறப்பித்திருந்தது. இந்த நிலையில், 5 ஆண்டுகளுக்கு பிறகு மது என்ற மதுசூதன் ஆடுகோடி போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவர் மீது ஆடுகோடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் கைதான 7 பேருக்கும் கோர்ட்டு ஏற்கனவே ஆயுள் தண்டனை விதித்திருப்பது குறிப்பிடத்க்கது.