விவசாயியின் வலி, வருத்தம் பற்றி புரிந்த அரசு ஆட்சிக்கு வந்துள்ளது: பிரதமர் மோடி
விவசாயியின் வலி, வருத்தம் மற்றும் கவலைகளை பற்றி புரிந்த அரசு பல தசாப்தங்களுக்கு பின் ஆட்சிக்கு வந்துள்ளது என பிரதமர் மோடி பேசியுள்ளார்.
சிகார்,
ராஜஸ்தானுக்கு இன்று வருகை தந்த பிரதமர் மோடி, சிகார் நகரில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அவர், பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் மற்றும் சில திட்ட பணிகளை தொடங்கியும் வைத்துள்ளார்.
1.25 லட்சம் பிரதம மந்திரி கிசான் சம்ருதி மையங்களை நாட்டுக்கு அர்ப்பணித்த அவர், தங்க யூரியா திட்டம் ஒன்றையும் தொடங்கி வைத்துள்ளார். இதன்பின்னர், சிகாரில் பொது கூட்டம் ஒன்றில் உரையாற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசும்போது, விவசாயிகள் ரூ.18 ஆயிரம் கோடியை பெற்றுள்ளனர். இதனால், நாட்டிலுள்ள 8.5 கோடி விவசாயிகள் பலன் பெற்றுள்ளனர்.
நாட்டில் 1.25 லட்சம் பிரதம மந்திரி கிசான் சம்ருதி மையங்கள் தொடங்கப்பட்டு உள்ளன. வெவ்வேறு இடங்களில் மருத்துவ கல்லூரிகள் மற்றும் ஏகலைவ மாதிரி பள்ளிகள் தொடங்கப்பட்டு உள்ளன என கூறியுள்ளார்.
தொடர்ந்து பிரதமர் மோடி பேசும்போது, விவசாயிகளின் ஆற்றல் மற்றும் கடின உழைப்பு ஆகியவை மண்ணில் இருந்து பொன்னை பிரித்தெடுக்கிறது. அதனாலேயே, நாட்டின் விவசாயிகளுக்கு நமது அரசு தோளோடு, தோள் நிற்கிறது.
விவசாயியின் வலி, வருத்தம் மற்றும் கவலைகளை பற்றி புரிந்த அரசு, நாடு விடுதலை அடைந்து பல தசாப்தங்களுக்கு பின் ஆட்சிக்கு வந்துள்ளது.
இதனை முன்னிட்டே, கடந்த 9 ஆண்டுகளில் விவசாயிகளின் நலன்களுக்காக தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என பிரதமர் மோடி பேசியுள்ளார்.