காஷ்மீரில் 2023-ம் ஆண்டுக்குள் 6 லட்சம் போதை பொருள் பயன்பாட்டாளர்களை மீட்க அரசு முடிவு
காஷ்மீரில் 2023-ம் ஆண்டுக்குள் 6 லட்சம் போதை பொருள் பயன்பாட்டாளர்களை மீட்க அரசு முடிவு செய்து உள்ளது.
ஸ்ரீநகர்,
ஜம்மு-மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் தொடர்ந்து போதை பொருள் பயன்பாடு அதிகரித்து காணப்படுகிறது. இதனை முடிவுக்கு கொண்டு வருவதற்காக அரசு, 17 துறைகள், உள்ளாட்சி அமைப்புகள், பஞ்சாயத்து அமைப்புகளுடன் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளது.
இதன்படி, போதை பொருள் பயன்பாட்டாளர்களை ஒரு மாதத்திற்குள் கண்டறிந்து அவர்களுக்கு 2023-ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் சிகிச்சை அளித்து சீரமைப்பதற்கான அறிவுறுத்தல்களை அரசு வழங்கி உள்ளது.
இதனை தொடர்ந்து, கடந்த 1-ந்தேதி முதல் வருகிற 30-ந்தேதி வரையில் காஷ்மீரை போதை பொருள் பிடியில் இருந்து விடுபடுவதற்கான பிரசாரம் மேற்கொள்ளப்படுவதுடன், யூனியன் பிரதேசத்தில் இருந்து பஞ்சாயத்து அமைப்புகள் மட்டம் வரை அதனை செயல்படுத்தவும் சிறப்பு அறிவுறுத்தல்களை அரசு வழங்கி உள்ளது.
இந்த போதை பொருள் ஒழிப்பு பிரசாரத்தின்படி, 6 லட்சம் போதை பொருள் பயன்பாட்டாளர்களை அடையாளம் கண்டு, அவர்களை சீர்படுத்தும் பணிகள் நடைபெறும். அந்த பழக்கத்தில் இருந்து அவர்கள் விடுபட்டு இயல்பான ஒரு வாழ்க்கையை அவர்கள் வாழ வழிவகை செய்யப்படும்.
போதை பொருள் கடத்தல்காரர்களை கடுமையாக தண்டிப்பதற்கான நடவடிக்கைகளை உறுதி செய்யும்படியும் காஷ்மீர் உள்துறை, தொடர்புடைய துறையினரை கேட்டு கொண்டுள்ளது.
இதனையடுத்து காஷ்மீரின் அனைத்து மாவட்டங்களிலும், இந்த மாத இறுதிக்குள் போதை பொருளில் இருந்து விடுபடுவதற்கான மறுவாழ்வு மையங்களை அமைக்கும்படி அரசு காலக்கெடு விதித்து உத்தரவிட்டு உள்ளது.