திருநங்கை சமூகத்திற்கு நீதி வழங்க அரசு தயார்- மந்திரி ஆர்.அசோக் பேச்சு
திருநங்கை சமூகத்திற்கு நீதி வழங்க அரசு தயார் என்று மந்திரி ஆர்.அசோக் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு: பெங்களூரு தாசரஹள்ளி தாசனபுராவில் உள்ள கங்கொண்டனஹள்ளியில் திருநங்கைகளுக்காக ஆதரவற்றோர் இல்ல கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இதில் வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் கலந்துகொண்டு பூமி பூஜையை நிறைவேற்றி பேசியதாவது:-
கர்நாடகத்தில் திருநங்கைகளுக்கு தேவையான நலத்திட்டங்களை அமல்படுத்தி அவர்களும் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய வைக்க அரசு நடவடிக்கை எடுக்கும். திருநங்கை சமூகத்தின் மேம்பாட்டிற்கு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த சமூகம் நீண்ட காலமாக ஒதுக்கப்பட்டதால் அவர்கள் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளனர். அந்த சமூகத்திற்கு உரிய நீதியை வழங்க அரசு தயாராக உள்ளது. முதல் முறையாக மத்திய அரசு ஜோகதி மஞ்சும்மா என்ற திருநங்கையை தேர்ந்தெடுத்து அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கியது. திருநங்கைகளுக்கு அடைக்கலம் வழங்கும் வகையில் அவர்களுக்கு அரசு நிலத்தை ஒதுக்கி கொடுத்துள்ளது. ஆதரவு இல்லம் கட்ட 20 குன்டா நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த கட்டிடம் கட்டுவதற்கான நிதியை அரசு ஒதுக்கி கொடுக்கும்.
இவ்வாறு ஆர்.அசோக் பேசினார்.
இதில் பெங்களூரு வளர்ச்சி ஆணைய தலைவர் எஸ்.ஆர்.விஸ்வநாத் எம்.எல்.ஏ., சாலுமரத திம்மக்கா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.