பெங்களூரு மானேக்ஷா மைதானத்தில் குடியரசு தின விழா; கவர்னர் நாளை தேசிய கொடி ஏற்றுகிறார்


பெங்களூரு மானேக்ஷா மைதானத்தில் குடியரசு தின விழா; கவர்னர் நாளை தேசிய கொடி ஏற்றுகிறார்
x
தினத்தந்தி 24 Jan 2023 6:45 PM GMT (Updated: 24 Jan 2023 6:45 PM GMT)

குடியரசு தின விழாவையொட்டி பெங்களூருவில் நாளை (வியாழக்கிழமை) நடைபெறும் விழாவில் கவர்னர் தாவர்சந்த் கெலாட் தேசிய கொடி ஏற்றுகிறார். இந்த விழாவில் பங்கேற்கும் பார்வையாளர்களுக்கு கட்டாயம் முககவசம் அணிய உத்தரவிடப்பட்டு உள்ளது.

பெங்களூரு:

குடியரசு தின விழா

பெங்களூரு மாநகராட்சி சார்பில் ஆண்டுதோறும் குடியரசு தினம் மற்றும் சுதந்திர தின விழா பெங்களூரு மானேக்ஷா மைதானத்தில் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அதுபோல் இந்த ஆண்டுக்கான குடியரசு தின விழா நாளை (26-ந்தேதி) பெங்களூரு மாநகராட்சி சார்பில் அங்கு நடத்தப்படுகிறது.

இதற்காக அங்கு பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பார்வையாளர்கள் அமர இருக்கைகள் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், போலீசார் மற்றும் ராணுவ வீரர்களின் சாகசங்களும், அணிவகுப்பும் நடைபெறுகிறது. இதையொட்டி அங்கு கடந்த சில நாட்களாக போலீசார், போலீஸ் மோப்ப நாய்களுடனும், வெடிகுண்டு நிபுணர்கள் மெட்டர் டிடெக்டர் கருவிகளுடனும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

குடியரசு தின விழாவுக்கு இன்னும் ஒரு நாளே இருப்பதால் மானேக்ஷா மைதானத்தில் குடியரசு தின விழாவில் பங்கேற்கும் மாணவ-மாணவிகள் கலை நிகழ்ச்சி ஒத்திகையிலும், போலீசார், ராணுவ வீரர்கள் அணிவகுப்பு, சாகச ஒத்திகையிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் மானேக்ஷா மைதானத்தில் நடந்து வரும் குடியரசு தின விழா ஏற்பாடுகள், பாதுகாப்பு நடவடிக்கைகளை பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத், மாநகர போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டி ஆகியோர் நேற்று நேரில் ஆய்வு செய்தனர்.

கவர்னர் கெலாட் தேசிய கொடி ஏற்றுகிறார்

அதன் பின்னர் மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

குடியரசு தின விழா 26-ந் தேதி (நாளை) பெங்களூருவில் பீல்டு மார்ஷல் மானேக் ஷா அணிவகுப்பு மைதானத்தில் நடக்கிறது. சரியாக காலை 9 மணிக்கு கவர்னர் தாவர்சந்த் கெலாட் தேசிய கொடி ஏற்றி உரையாற்றுகிறார். இதற்காக அவர் காலை 8.58 மணிக்கு விழா நடைபெறும் பகுதிக்கு வருகிறார். அவருக்கு முப்படை அதிகாரிகள் அறிமுகம் செய்து வைக்கப்படுகிறார்கள்.

38 குழுக்கள்

அதன் பிறகு அவர் போலீசாரின் அணிவகுப்பை திறந்த ஜீப்பில் சென்று பார்வையிடுகிறார். பின்னர் விழா மேடைக்கு வரும் கவர்னர், குடியரசு தினவிாா உரையாற்றுகிறார். அதன் பிறகு பல்வேறு படை பிரிவுகளின் அணிவகுப்பு மரியாதையை கவர்னர் ஏற்று கொள்கிறார். அணிவகுப்பில் போலீஸ், கேரள போலீஸ், சாரண-சாரணியர் இயக்கம், என்.சி.சி., சேவாதளம், பல்வேறு பள்ளி-கல்லூரி மாணவர்களின் குழுக்கள் என மொத்தம் 38 குழுக்கள் கலந்துகொள்கின்றன. இதில் 1,520 பேர் கலந்து கொள்கிறார்கள்.

பள்ளி குழந்தைகள் கலந்து கொள்ளும் தேசபக்தி கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. 3 பாடல்களுக்கு 2 ஆயிரம் குழந்தைகள் நடனமாடுகிறார்கள். அதன் பிறகு சிறப்பான கலை மற்றும் படை குழுக்களுக்கு கவர்னர் தாவர்சந்த் கெலாட் விருது வழங்குவார். மகா தலைவர் அம்பேத்கர், விவசாயிகள், பாரதமாதா குறித்த கலை நிகழ்ச்சிகள் மற்றும் களரி சண்டை, ராணுவ வீரர்களின் மோட்டார் சைக்கிள் சாகச நிகழ்சிகள் நடைபெற உள்ளன.

ஸ்கேனர் கருவிகள்

கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள விழா நடைபெறும் மைதானத்தை சுற்றிலும் 100 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. 2 ஸ்கேனர் கருவிகள் வைக்கப்பட்டு, மைதானத்திற்கு வருபவர்கள் சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். பெங்களூருரில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் போதுமான அளவுக்கு படுக்கைககள் தயாராக வைக்கப்பட்டு உள்ளன. டாக்டர்கள், நர்சுகள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

விழா நடைபெறும் பகுதியில் தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. மிக முக்கிய பிரமுகர்களுக்கு ஜி-2 நுழைவு வாயில், மற்ற எல்லா துறைகளின் அதிகாரிகளுக்கு ஜி-3 நுழைவு வாயில் ஒதுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் ஜி-4 நுழைவு வாயிலில் அனுமதிக்கப்படுவார்கள். மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளுக்கு மேடையின் வலதுபுறமும், ஊடகத்தினருக்கு இடது புறத்திலும் இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. விழாவில் கலந்து கொள்கிறவர்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும். தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு துஷார் கிரிநாத் கூறினார்.

5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு

குடியரசு தின விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் பிரதாப்ரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது:-

குடியரசு தின விழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. அதாவது 12 துணை போலீஸ் கமிஷனர்கள், 22 உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் 65 பேர், மகிளா இன்ஸ்பெக்டர்கள் 46 பேர், உதவி சப்-இன்ஸ்பெக்டர்கள் 194 பேர், ஆயிரத்து 5 காவலர்கள், மகளிர் போலீசார் 77 பேர், 172 அதிகாரிகள் சொந்த உடையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

இது தவிர மைதானத்தை சுற்றிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. கர்நாடக ஆயுதப்படையின் 10 கம்பெனிகள், 3 தீயணைப்பு வாகனங்கள், 2 ஆம்புலன்ஸ் வாகனங்கள் அங்கு நிறுத்தப்படும். ஒரு அதிவிரைவுப்படை வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். ஒரு கருடா படையும் பாதுகாப்பு பணியில் ஈடுபடும். மொத்தம் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

அனுமதி இல்லை

விழாவுக்கு வருகிறவர்கள் காலை 8.30 மணிக்குள் இருக்கையில் அமர வேண்டும். பொதுமக்கள் மணிப்பால் சென்டர் வழியாக 4-வது நுழைவு வாயிலுக்கு வர வேண்டும். விழாவுக்கு வருகிறவர்கள் யாரும் உடன் எந்த பொருட்களையும் கொண்டுவர அனுமதி இல்லை. சந்தேகப்படும்படியான நபர்களையோ அல்லது பொருட்களையோ கண்டால் அதுகுறித்து போலீசாரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும்.

பணம் வைக்கும் 'மணிபர்ஸ்', செல்போன், மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் உபகரணங்களை தவிர மற்ற பொருட்களை விழா மைதானத்திற்குள் எடுத்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பிரதாப்ரெட்டி கூறினார்.

இந்த பேட்டியின்போது பெங்களூரு நகர மாவட்ட கலெக்டர் தயானந்த் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

தடை செய்யப்பட்ட பொருட்கள்

குடியரசு தின விழா நடைபெறும் மைதானத்திற்குள் துண்டு பிரசுரங்கள், கூர்மையான கத்திகள் மற்றும் ஆயுதங்கள், சிகரெட், தீப்பெட்டி, தேசிய கொடியை தவிர்த்து வேறு கொடிகள், வண்ண பொடிகள், உணவு பொருட்கள், கேமராக்கள், மதுபாட்டில்கள், போதைப்பொருட்கள், குடிநீர் பாட்டில்கள் மற்றும் கேன்கள், பட்டாசு மற்றும் வெடிபொருட்கள் ஆகியவற்றை கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ளது.


Next Story