புதுமாப்பிள்ளை மூளைச்சாவு
சாலை விபத்தில் சிக்கிய புதுமாப்பிள்ளை மூளைச்சாவு அடைந்தார். அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய முடிவு செய்யதுள்ளனர்.
மங்களூரு:-
தறிகெட்டு ஓடியது
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு செம்புகுட்டே கிராமத்தை சேர்ந்தவர் பூஷன் ராய் (வயது 20). இவரது தந்தை கடந்த ஆண்டு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இதையடுத்து அவர் தனது தாயுடன் வசித்து வந்தார். கடந்த 2 வாரத்திற்கு முன்பு தான் அவருக்கு திருமணம் நடந்து முடிந்தது. இந்த நிலையில் அவர் தனது மோட்டார் சைக்கிளில் கல்லபு புர்துகோளிக்கு சென்றார்.
பின்னர் அவர் அங்கிருந்து தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டு வந்தார். இந்த நிலையில் அவர் குதார் அருகே உள்ள கோவிலை கடக்க முயன்றபோது திடீரென அவரது கட்டுப்பாட்டை மோட்டார் சைக்கிள் இழந்தது. மேலும், சாலையில் தறிகெட்டு ஓடிய மோட்டார் சைக்கிள், சாலையின் குறுக்கே உள்ள தடுப்பில் மோதியது.
தீவிர சிகிச்சை
இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து பூஷன் ராய் தூக்கி வீசப்பட்டார். இதில் அவருக்கு உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டன. இதையடுத்து அருகில் இருந்தவர்கள் உடனடியாக டவுன் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். மேலும், வாலிபரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில், அதிவேகமாக மோட்டார் சைக்கிளில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டது தெரிந்தது. இதுகுறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே விபத்தில் காயமடைந்த வாலிபர், தனியார் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.
மூளைச்சாவு
அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், பூஷன் ராய் மூளைச்சாவு அடைந்தார். இதுகுறித்து டாக்டர்கள், அவரது குடும்பத்தினரிடம் கூறினர். அதைகேட்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் கதறி அழுதனர்.
இதையடுத்து மூளைச்சாவு அடைந்த மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது தாய் உள்பட குடும்பத்தினர் முன்வந்தனர். அவரது உடல் உறுப்புகளை அறுவை சிகிச்சை செய்து எடுத்து, தேவைப்படும் ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.