சிவமொக்காவில் விடிய, விடிய கொட்டி தீர்த்த கனமழை; வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அவதி
சிவமொக்காவில் விடிய, விடிய கொட்டி தீர்த்த கனமழையில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அவதி அடைந்துள்ளனர்.
சிவமொக்கா;
கர்நாடகத்தில் இந்த மாத தொடக்கத்தில் இருந்து 10 நாட்களுக்கும் மேலாக பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் பல பகுதிகள் வெள்ளக்காடானது. இந்த நிலையில், கடந்த சில தினங்களாக மழை பெய்யாமல் ஓய்வெடுத்திருந்தது.
இந்த நிலையில் கர்நாடகத்தில் அடுத்த சில தினங்கள் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. அதன்படி நேற்று முன்தினம் மாலையில் சிவமொக்காவில் கனமழை பெய்தது. பிறகு சிறிது நேரம் ஓய்ந்த கனமழை, நள்ளிரவில் தொடங்கி நேற்று காலை வரை விடிய, விடிய கொட்டி தீர்த்தது.
இதனால் சிவமொக்கா டவுன் அண்ணா நகரில் தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளுக்குள் மழைநீருடன் கழிவுநீர் கலந்து புகுந்துள்ளது. மேலும் சாலை முழுவதும் தண்ணீர் கடல் போல் தேங்கி நின்றது. இதனால் பல வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் இரவு முழுவதும் மக்கள் தூங்காமல் மழை நீரை வாளிகள் மூலமாக வெளியேற்றனர். இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.