பெங்களூருவில் மாநகராட்சி குப்பை லாரி மோதியதில் படுகாயம் அடைந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி சாவு


பெங்களூருவில் மாநகராட்சி குப்பை லாரி மோதியதில் படுகாயம் அடைந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி சாவு
x

பெங்களூருவில் மாநகராட்சி குப்பை லாரி மோதியதில் படுகாயம் அடைந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி பலியானார். அவருக்கான சிகிச்சை செலவு ரூ.5¾ லட்சத்தை போக்குவரத்து போலீசார் தள்ளுபடி செய்ய வைத்துள்ளனர்.

பெங்களூரு:

குப்பை லாரி மோதி பலி

பெங்களூரு மரியம்மனபாளையாவை சேர்ந்தவர் யேகேந்திரா(வயது 41), தொழிலாளி. இவரது மனைவி விஜயகலா(38). இந்த தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், கடந்த 9-ந் தேதி பேடராயனபுரா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் யோகேந்திரா சென்று கொண்டு இருந்தார் .அப்போது அதே சாலையில் வந்த மாநகராட்சியின் குப்பை லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் விஜயகலா சம்பவ இடத்திலேயே பலியானார்.

யோகேந்திரா படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார். அவர் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி 5 நாட்களுக்கு பின்பு நேற்று முன்தினம் யோகேந்திரா உயிரிழந்தார். இதன் காரணமாக பெற்றோரை பறி கொடுத்துவிட்டு, யோகேந்திராவின் 9 வயது மற்றும் 7 வயது மகள்கள் தனியார் ஆஸ்பத்திரியில் பரிதவித்தபடி இருந்தார்கள்.

ரூ.5.72 லட்சம் தள்ளுபடி

அதே நேரத்தில் யோகேந்திராவுக்கு கடந்த 5 நாட்கள் சிகிச்சை அளித்ததற்காக ரூ.5.72 லட்சத்தை செலுத்த வேண்டும் என்று ஆஸ்பத்திரி நிர்வாகம் தெரிவித்திருந்தது. இதுபற்றி அறிந்த பேடராயனபுரா போக்குவரத்து போலீசார் மற்றும் துணை போலீஸ் கமிஷனர் குல்தீப் ஜெயின், தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்று நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். விபத்தில் பெற்றோரை இழந்திருப்பதால், அந்த குழந்தைகள் தொடர்ந்து கல்வி கற்க வேண்டிய நிலை உள்ளது. அதனால் யோகேந்திராவுக்கு ஆன ரூ.5.72 லட்சம் சிகிச்சை செலவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

இதனை ஏற்றுக் கொண்ட தனியார் ஆஸ்பத்திரி நிர்வாகம், யோகேந்திராவுக்கு ஆன ரூ.5.72 லட்சம் சிகிச்சை கட்டணத்தை தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளது. விபத்தில் உயிர் இழந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு உதவிய போக்குவரத்து போலீசாருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது. அதே நேரத்தில் குப்பை லாரி மோதி இருந்தும், மாநகராட்சி சார்பில் எந்த நிவாரண உதவியும் செய்யாமல் இருந்து வருவதாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.


Next Story