வன ஊழியரை தாக்கிவிட்டு தப்பி ஓடியவர் சுட்டு பிடிப்பு


வன ஊழியரை தாக்கிவிட்டு தப்பி ஓடியவர் சுட்டு பிடிப்பு
x
தினத்தந்தி 2 Dec 2022 2:15 AM IST (Updated: 2 Dec 2022 2:15 AM IST)
t-max-icont-min-icon

சந்தன மர கடத்தலை தடுக்க முயன்றபோது வன ஊழியரை தாக்கிவிட்டு தப்பி ஓடியவர் துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்ட சம்பவம் மண்டியாவில் நடந்துள்ளது.

மண்டியா:-

சந்தன மரம் வெட்டி கடத்தல்

மண்டியா மாவட்டம் நாகமங்களா தாலுகா தேவலாபூர் வனப்பகுதியில் சிலர் சந்தன மரங்களை வெட்டி கடத்துவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து வன ஊழியர்கள், வனத்துறை அதிகாரிகள் வனப்பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது அந்தப்பகுதியில் 3 பேர் சந்தன மரங்களை வெட்டி கடத்தி செல்ல முயன்றது தெரியவந்தது.

வனத்துறையினரை பார்த்ததும் அவர்கள் 3 பேரும் அங்கிருந்து தப்பியோட முயன்றனர். அப்போது வனத்துறையினர் அவர்கள் 3 பேரையும் சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர்.

துப்பாக்கியால் சுட்டு பிடிப்பு

அந்த சமயத்தில் ஒருவர் வன ஊழியர் சகாயம் என்பவரை அரிவாளால் தாக்கிவிட்டு தப்பி ஓடினார். அப்போது வனத்துறை அதிகாரி துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு சரண் அடைந்துவிடும்படி எச்சரிக்கை விடுத்தார். ஆனாலும் அவர் தொடர்ந்து ஓடினார். அப்போது வனத்துறை அதிகாரி, துப்பாக்கியால் அவரை நோக்கி ஒரு ரவுண்டு சுட்டார். அதில் குண்டு அவரது காலில் பாய்ந்தது. இதனால் அவர் சுருண்டு விழுந்தார்.

இதையடுத்து அவரை வனத்துறையினர் சுற்றி வளைத்து பிடித்தனர். இதையடுத்து அவரையும், மற்ற 2 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர். மேலும் காயம் அடைந்த வன ஊழியர் சகாயத்தையும், குண்டு காயம் அடைந்த நபரையும் வனத்துறையினர் மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

தந்தை, மகன்கள்

பிடிபட்டவர்கள் ஹாசனை சேர்ந்த கோவிந்தப்பா, அவரது மகன்கள் சங்கர் மற்றும் குமார் என்பது தெரியவந்தது. இதுகுறித்து வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story