மகன் இறந்துவிட்டதால் மருமகளை வீட்டைவிட்டு துரத்திய மாமியார்


மகன் இறந்துவிட்டதால் மருமகளை வீட்டைவிட்டு துரத்திய மாமியார்
x

மைசூருவில் காதலித்து திருமனம் செய்து கொண்ட நிலையில் மகன் இறந்து விட்டதால் மருமகளை அந்த பெண்ணின் மாமியார் வீட்டைவிட்டு துரத்தினார். ஆனால் அந்த இளம்பெண் போராட்டத்தில் ஈடுபட்டு மீண்டும் மாமியார் வீட்டில் குடியேறினார்.

மைசூரு:-

காதல் திருமணம்

மைசூரு டவுன் யாதவகிரி பகுதியைச் சேர்ந்தவர் வத்சலா(வயது 28). இவர் அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ் என்பவரை கடந்த சில வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது காதலுக்கு சதீசின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் அந்த எதிர்ப்பை மீறி இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

இதையடுத்து சதீஷ், தனது மனைவி வத்சலாவுடன் அவரது வீட்டிலேயே குடியேறினார். பின்னர் அவர்களுக்கு 2 மகன்கள் பிறந்தனர். இந்த நிலையில் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சதீஷ் திடீரென இறந்துவிட்டார்.

அடிக்கடி சண்டை

அதன்பிறகும் வத்சலா தனது மகன்களுடன் கணவர் வீட்டிலேயே வசித்து வந்தார். இந்த நிலையில் சதீஷ் இறந்து விட்டதால் அவரது பெற்றோர் வத்சலாவிடம் அடிக்கடி சண்டையிட்டு வந்தனர். ஆனால் அதை அவர் பொருட்படுத்தவில்லை. இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வத்சலாவையும், அவரது 2 மகன்களையும் சதீசின் பெற்றோர் வீட்டைவிட்டு வெளியே தள்ளிவிட்டு விரட்டியடித்தனர். இதனால் மனமுடைந்த வத்சலா தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

அதையடுத்து தனது குடும்பத்தினருடன் வந்து தன்னுடைய கணவன் வீட்டின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது தன்னையும், தனது 2 குழந்தைகளையும் மாமனார்-மாமியார் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கோரினார்.

பரபரப்பு

ஆனால் அதை அவர்கள் கேட்காமல் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றுவிட்டனர். இதனால் கடந்த 2 நாட்களாக வத்சலா அங்கேயே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். இந்த நிலையில் இதுபற்றி அறிந்த போலீசாரும், தன்னார்வ தொண்டு அமைப்பினரும் நேரில் வந்தனர். பின்னர் போலீசார் அனுமதி அளித்ததன் பேரில் தனது மாமனார் வீட்டின் பூட்டை உடைத்து வத்சலா வீட்டுக்குள் சென்றார்.

என் கணவர் இறந்துவிட்ட நிலையில் என்னுடைய 2 மகன்களுடன் நான் எங்கே போவேன் என்று அவர் கண்ணீர் மல்க கூறினார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story