ஷிண்டே குழுவுக்கு சிவசேனா பாலாசாஹேப் என பெயர்; இல்லத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு
ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான புதிய குழுவுக்கு சிவசேனா பாலாசாஹேப் என பெயர் சூட்டப்பட்டு உள்ளது.
புனே,
மராட்டியத்தில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் ஆதரவுடன் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா ஆட்சி நடந்து வரும் சூழலில், கடந்த சில நாட்களாக மராட்டிய மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் ஓரணியில் திரண்டு உள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
அசாமின் கவுகாத்தி நகரில் உள்ள புளூ ரேடிசன் ஓட்டலில், சிவசேனா மற்றும் சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள், ஆளும் அரசுக்கு எதிராக மறைமுக போர்க்கொடியை உயர்த்தி உள்ளனர். அவர்களை ஆலோசனை நடத்த மும்பைக்கு வரும்படி, சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் அழைப்பு விடுத்தும் பலனில்லை. கூட்டணி மீது அதிருப்தி தெரிவித்ததுடன், கூட்டணியை விட்டு வெளியே வரும்படி சிவசேனாவுக்கு ஷிண்டே அழைப்பு விடுத்து உள்ளார்.
கட்சிக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்த ஷிண்டே, சட்டமன்ற கட்சி தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக அஜய் சவுத்ரியை அந்த பதவியில் அமர்த்தும் முடிவுக்கு துணை சபாநாயகர் ஒப்புதல் வழங்கி உள்ளார். இதேபோன்று, முதல்-மந்திரி விடுத்த அழைப்பினை ஏற்று கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ளாத எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி துணை சபாநாயகருக்கு சிவசேனா கடிதம் எழுதியுள்ளது.
எதிரணியில் உள்ள அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யும்படியும் சிவசேனா கடிதத்தில் தெரிவித்து உள்ளது. தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டிய எம்.எல்.ஏ.க்கள் பெயர்கள் அடங்கிய பட்டியலை ஜிர்வாலிடம் சிவசேனா கொடுத்துள்ளது.
இந்த சூழலில், மராட்டியத்தின் 2 சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள், மராட்டிய துணை சபாநாயகருக்கு எழுதியுள்ள கடிதத்தில், எம்.எல்.ஏ.க்கள் யாரையும் நீங்கள் சஸ்பெண்டு செய்ய முடியாது. ஏனெனில் உங்களுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் முன்பே நிலுவையில் உள்ளது என தெரிவித்து உள்ளனர்.
இந்நிலையில், சிவசேனாவின் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் நேற்று நடத்திய கூட்டம் ஒன்றில், மராட்டிய துணை சபாநாயகர் நர்ஹாரி ஜிர்வாலை பதவியில் இருந்து நீக்கும் தீர்மானம் ஒன்றை இயற்றுவது என திட்டமிட்டு உள்ளனர். இதற்காக அதிருப்தி குழுவில் உள்ள 46 எம்.எல்.ஏ.க்களின் கையெழுத்து அடங்கிய தீர்மானம் ஒன்றை தயாரிக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.
ஷிண்டே, மொத்தமுள்ள 55 சிவசேனா எம்.எல்.ஏ.க்களில் 40 பேர் தனக்கு ஆதரவாக உள்ளனர். தவிர 12 சுயேச்சை எம்.எல்.ஏ.க்களும் உடன் உள்ளனர் என கூறியுள்ளார்.
இந்நிலையில், மராட்டியத்தின் பல பகுதிகளில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்கள் மீது சிவசேனா தொண்டர்கள் இன்று தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், முன்னாள் மத்திய உள்துறை இணை மந்திரி மற்றும் அதிருப்தி எம்.எல்.ஏ.வான தீபக் கேசர்கார் கூறும்போது, ஏக்நாத் ஷிண்டே உருவாக்கியுள்ள புதிய குழுவுக்கு சிவசேனா பாலாசாஹேப் என பெயர் சூட்டப்பட்டு உள்ளது என கூறியுள்ளார்.
இதுபற்றி மராட்டிய காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான அசோக் சவான் கூறும்போது, சபாநாயகரிடம் இருந்து சட்டப்பூர்வ அங்கீகாரம் பெறும் வரை இதுபோன்ற குழுக்களை ஏற்று கொள்ள முடியாது என கூறியுள்ளார். இந்நிலையில், தானே நகரில் உள்ள ஏக்நாத் ஷிண்டேவின் இல்லத்திற்கு வெளியே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் மராட்டிய அரசியலில் அடுத்தடுத்து புதிய திருப்பம் ஏற்பட்டு வருகிறது.