ஹாசனில் பஞ்சரத்னா யாத்திரை மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு


ஹாசனில் பஞ்சரத்னா யாத்திரை மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு
x

ஹாசனில் பஞ்சரத்னா யாத்திரை நடந்தது. மக்கள் இந்த யாத்திரைக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ஹாசன்:-

கர்நாடக சட்டசபை தேர்தல்

கர்நாடக சட்டசபைக்கு இன்னும் 3 மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி ஆளும் பா.ஜனதா, காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சியினர் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்கள். பா.ஜனதா ஜனசங்கல்ப, விஜயசங்கல்ப என்ற பெயரிலும், காங்கிரஸ் கட்சியினர் பிரஜாத்வானி என்ற பெயரிலும், ஜனதாதளம்(எஸ்) கட்சி பஞ்சரத்னா என்ற பெயரிலும் மாநிலம் முழுவதும் யாத்திரை நடத்தி வருகிறார்கள்.

மேலும் கட்சிகளை சேர்ந்த முக்கிய தலைவர்களும் தீவிர வாக்கு வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் கர்நாடகத்தில் சட்டசபை தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.

பஞ்சரத்னா யாத்திரை

இந்த நிலையில் ஹாசன் மாவட்டம் அரிசிகெரேயில் ஜனதாதளம்(எஸ்) கட்சி சார்பில் பஞ்சரத்னா யாத்திரை நடந்தது. இதில் முன்னாள் முதல்-மந்திரியும், கட்சியின் மூத்த தலைவருமான குமாரசாமி கலந்துகொண்டார். அவருக்கு அரிசிகெரேயில் ஜனதாதளம்(எஸ்) கட்சி சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அரிசிகெரே டவுன் பகுதியில் குமாரசாமி திறந்த வாகனத்தில் சென்று தெருமுனை பிரசாரம் (ரோடு ஷோ) நடத்தினார்.

மக்களும், ஜனதா தளம்(எஸ்) கட்சியின் தொண்டர்களும் வழிநெடுகிலும் நின்று குமாரசாமிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மாநில வளர்ச்சிக்கு...

இந்த யாத்திரையின் கட்சியின் மாநில தலைவர் சி.எம்.இப்ராகிம், குமாரசாமியின் சகோதரரும், முன்னாள் மந்திரியுமான எச்.டி.ரேவண்ணா, ஹாசன் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா, சூரஜ் ரேவண்ணா உள்பட பலர் கலந்துகொண்டனர். இதையடுத்து அரிசிகெரேயில் பொதுக்கூட்டம் நடந்தது. இந்த பொதுக்கூட்டத்தை தொடங்கி வைத்து குமாரசாமி பேசியதாவது:-

சில கட்சிகள் பணம் கொடுத்து கூட்டத்துக்கு ஆள் சேர்க்கிறார்கள். ஆனால் ஜனதாதளம்(எஸ்) கட்சிக்கு அப்படி இல்லை. பணத்தை எதிர்பார்க்காமல் நீங்கள் (மக்கள்) வந்துள்ளீர்கள். வேறு எந்த கட்சியிலும் இப்படி நடக்காது. நான் முதல்-மந்திரியாக இருந்தபோது மாநிலத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டேன். பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை அமல்படுத்தினேன்.

18 மணி நேரம் உழைப்பு

வருகிற சட்டசபை தேர்தலில் ஜனதாதளம்(எஸ்) கட்சிக்கு ஆதரவு அளித்து நீங்கள் வெற்றி பெற செய்ய வேண்டும். சிலர் அதிகாரத்திற்காக கட்சி மாறுகிறார்கள். யார் மாறினாலும் ஜனதாதளம் (எஸ்) கட்சியை அசைக்க முடியாது. 91 வயதிலும் தேவேகவுடா விவசாயிகளின் நலனுக்காக குரல் கொடுத்து வருகிறார். ஜனதாதளம்(எஸ்) கட்சியை ஆட்சியில் அமர்த்த தினமும் 18 மணி நேரம் உழைக்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த யாத்திரையில் ஜனதாதளம்(எஸ்) கட்சியின் அரிசிகெரே தொகுதி எம்.எல்.ஏ. சிவலிங்கே கவுடா கலந்துகொள்ளவில்லை.


Next Story