தொடர் அட்டகாசம் செய்த சிறுத்தை கூண்டில் சிக்கியது
பிரியப்பட்டணாவில் தொடர் அட்டகாசம் செய்து வந்த சிறுத்தை கூண்டில் சிக்கி உள்ளது. இதனால் கிராம மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மைசூரு:-
சிறுத்தை அட்டகாசம்
மைசூரு மாவட்டம் பிரியப்பட்டணா தாலுகா ராமனதுங்கா கிராமம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் இருந்து கடந்த சில தினங்களாக சிறுத்தை ஒன்று வெளியேறி கிராமத்தில் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வந்தது. மேலும் அந்த சிறுத்தை, ஆடு, மாடு மற்றும் நாய்களை வேட்டையாடி கொன்று தொடர்ந்து அட்டகாசம் செய்து வந்தது. இதனால் பீதியடைந்த கிராம மக்கள், விளைநிலங்களுக்கு செல்லவே பயத்தில் இருந்தனர். மேலும் இரவு நேரங்களில் வீடுகளை விட்டு வெளியே வராமல் இருந்தனர்.
இந்த நிலையில் தொடர் அட்டகாசம் செய்து வரும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று அந்தப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்தனர்.
கூண்டில் சிக்கியது
கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று வனத்துறையினர் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்து அந்தப்பகுதியில் இரும்பு கூண்டு ஒன்றை வைத்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியில் இருந்து உணவு தேடி வெளியேறிய அந்த சிறுத்தை, இரும்பு கூண்டுக்குள் வசமாக சிக்கிக் கொண்டது. இதுபற்றி தகவல் அறிந்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.
மேலும் ராமனதுங்கா உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம மக்கள் திரண்டு வந்து சிறுத்தையை பார்த்தனர். இதையடுத்து வனத்துறையினர் அந்த சிறுத்தையை, கூண்டுடன் லாரியில் ஏற்றி அங்கிருந்து கொண்டு சென்றனர்.
கிராம மக்கள் மகிழ்ச்சி
இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், பிடிபட்டது 3 வயது சிறுத்தை ஆகும். இந்த சிறுத்தை நாகரஒலே வனப்பகுதியில் விடப்படும் என்றார். தொடர் அட்டகாசம் செய்து வந்த சிறுத்தை சிக்கியதால் கிராம மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.